தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததே ராஜபக்ச அரசு! சஜித் அணி.
ராஜபக்ச அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை வெளிநாட்டிலிருந்து வந்த வைரஸால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் ராஜபக்ச உறவினர்களால் வந்த வைரஸால் மக்கள் இரண்டாவது முறையாகப் பாதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.
“ராஜபக்ச அரச தரப்பினர் நாட்டின் பெரும் பகுதியைச் சீனாவுக்குத் தாரைவார்த்துக் கொடுத்துள்ளனர். சங்ரிலா ஹோட்டல் பகுதி, துறைமுக நகர பெரும் பகுதி ஆகியவற்றை சீனாவுக்கு வழங்கியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பிரஜாவுரிமை கொண்டவர்கள். நாட்டின் சொத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கின்றனர்.
இதன் உச்சமாக கடந்த வாரத்தில் இந்த நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களினதும் உரிமத்தை வெளிநாட்டவர்களுக்கு ஒப்படைத்துவிட்டனர்.
கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் 40 சதவீத பங்குகள் திறைசேரிக்குச் சொந்தமானவை. 23.9 சதவீத பங்குகள் ஊழியர் சேமநல நிதியத்துக்குச் சொந்தமானவை.
இந்த நாட்களில் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இடம்பெறுகின்றன.
இந்த அரசு சங்கைக்குரிய தேரர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது. இந்த அரசைப் போன்று பொய் கூறும் ஓர் அரசைப் பார்த்ததில்லை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கூறுகின்றார். ஜனாதிபதி ஐ.நாவிலிருந்து வந்து சிறைக்கைதிகளை விடுதலை செய்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை” – என்றார்.