கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா திட்டத்தில் வடக்கு மாகாணம் புறக்கணிப்பு!
இலங்கை முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் கிராமத்துக்கு 30 இலட்சம் ரூபா திட்டம் வடக்கு மாகாணத்துக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் மேற்படி திட்டம் தொடர்பில் செயலணியால் அண்மையில் சகல பிரதேச செயலாளர்களுக்கும் 14 பக்கங்களில் சுற்றுநிருபம் அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான கலந்துரையாடலும் அண்மையில் சூம் வழியாக இடம்பெற்றது.
அவ்வாறு இடம்பெற்ற கலந்துரையாடலில் வடக்கு மாகாணத்தின் 34 பிரதேச செயலாளர்கள் மட்டும் அழைக்கப்படவில்லை எனத் தற்போது தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் வடக்கைப் புறக்கணித்து ஏனைய 8 மாகாணங்களில் மட்டும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இது தொடர்பில் வடக்கில் மக்களின் வாக்கைப் பெற்று நாடாளுமன்றத்தில் அரச தரப்பில் அங்கம் வகிக்கும் ஓர் அமைச்சர் உள்ளிட்ட நால்வரும் இதுவரை மௌனம் காக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.