அரிசிக்கும் சீனிக்கும் மக்கள் நீண்ட வரிசைகளில்; பஸில் வந்ததால் என்ன பயன்?
“பஸில் ராஜபக்ஷ நிதி அமைச்சரானவுடன் மக்களினதும் நாட்டினதும் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என அரச தரப்பினர் கூறினார்கள். ஆனால், பஸில் ராஜபக்ச நிதி அமைச்சரான பின்னர் அரிசிக்கும், சீனிக்கும் மக்கள் சதொச முன்பாக நீண்ட வரிசையில் மணித்தியாலக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டுள்ளது.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும்போது அவர் மேலும் கூறுகையில்,
“நாட்டின் பொருளாதாரம் பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது. இறக்குமதி செய்யப்படும் சகல பொருட்களுக்கும் விலை நிர்ணயம் இல்லாது சாதாரண மக்களுக்குப் பாரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அரசு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலமாக விலையை நிர்ணயித்தாலும் கூட சாதாரண மக்களால் தாக்குப் பிடிக்க முடியாத நிலையே காணப்படுகின்றது. எனவே, கொரோனாத் தொற்றுக்கு மேலதிகமான நாட்டினுடைய நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார கொள்கைகளில் தவறு இருப்பதாகத்தான் கருத வேண்டியுள்ளது.
இந்த அரசு பதவியேற்ற பின்னர் பல அதிகாரிகள், அமைச்சினுடைய செயலாளர்கள், பணிப்பாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் கூட பணியாற்ற முடியாது தமது பதவிகளை இராஜிநாமா செய்துள்ளனர்.
நேர்மையான அதிகாரிகளை அரசு தமது அரசியல் சுயநலன்களுக்காகப் பயன்படுத்த முயற்சித்த வேளையில் அதற்கு இடம் கொடுக்காத அவர்களைப் பதவியில் இருந்து மாற்றும் நிலை உருவாகியுள்ளது.
நிதி அமைச்சு என்பது மத்திய வங்கியின் ஆளுநருடன் நேரடியாகத் தொடர்புபட்டது, ஒரு புறம் கொரோனா தாக்கத்தைச் செலுத்துகின்றது. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் அரசியல் தலையீடுகள் ஏற்படுவதனால் மக்களுக்குப் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.
பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு வருவதற்கு முன்பாக ஆளுந்தரப்பு உறுப்பினர்கள், பஸில் ராஜபக்ஷ வந்தவுடன் சகல பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் எனக் கூறினார்கள். ஆனால், அரிசிக்கும், சீனிக்கும் மக்கள் சதொச முன்பாக வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. இதனை நிதி அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். நாட்டில் சாதாரண மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளச் சிரமப்படுகின்றனர். விலையேற்றம் காரணமாக சாதாரண குடும்பங்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் செய்ய பசளைகளைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. இவ்வாறு பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வருகின்றனர்” – என்றார்.