கல்வி, இலத்திரனியல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை கூட்டு அபிவிருத்திக்கு லாட்விய இணக்கம்:

லாட்வியா குடியரசின் ஜனாதிபதி எகில்ஸ் லெவிட்ஸ் (Egils Levits) அவர்களை நேற்று பிற்பகல் நான் நியூயோர்க் நகரில் சந்தித்து உரையாடினேன்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடரினது அரச தலைவர்கள் மாநாட்டுக்கு மத்தியில், இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருபத்து ஐந்து வருடகால தூதரகத் தொடர்புகளைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்காக, பலமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது, எம் இருவரதும் கருத்தாக அமைந்திருந்தது.
கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக, பொருளாதாரம் மற்றும் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும் நாம் இருவரும் அவதானம் செலுத்தியதோடு,
தொற்றுப்பரவல் நீங்கியவுடன், இரு நாடுகளினதும் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.
கல்வி, இலத்திரனியல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை அதிகரித்துக்கொள்வது தொடர்பிலும், இதன்போது நாம் அவதானம் செலுத்தினோம்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் அமைப்பு மாற்றம்பெற வேண்டும் என்பதோடு –
ஆசியா, தென்னாபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென் அமெரிக்க வலய நாடுகளுக்கு அதிகப்படியான அங்கத்துவம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் நாம் இருவரும் அவதானம் செலுத்தினோம்.
வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எனது தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.