கோவிட் பாதித்தவர்கள் பயன்படுத்திய பொருள்களை அப்புறப்படுத்த வேண்டுமா?
`கோவிட் தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் பயன்படுத்திய பெட்ஷீட், தலையணை உறை போன்றவற்றைத் தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவற்றை நிச்சயம் முறையாகச் சுத்தம் செய்துதான் மறுபடி பயன்படுத்தலாம் என பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் குமாரசாமி.
குணமானவர்கள் பயன்படுத்திய துணிகள் உட்பட அனைத்தையும் மற்றவர்களின் துணிகள், தலையணை உறை, படுக்கை விரிப்பு போன்றவற்றுடன் கலக்காமல் தனியே துவைக்க வேண்டும். வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் டிடெர்ஜென்ட் கொண்டே துவைக்கலாம். துவைத்தவற்றை நல்ல வெயிலில் காயவைத்து எடுத்து மீண்டும் பயன்படுத்தலாம்.
அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்ட அறையையும் சுத்தப்படுத்த வேண்டும். முதல் வேலையாக அந்த அறையின் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை வெளிச்சமும் காற்றோட்டமும் வரும்படி நன்றாகத் திறந்து வைக்க வேண்டும். மிக முக்கியமாக அவர்கள் பயன்படுத்திய குளியலறை, கழிவறைகளை வழக்கமாக நீங்கள் பயன்படுத்தும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவர்கள் எச்சில் பட்ட இடங்கள், அதாவது வாஷ்பேசின் போன்றவற்றையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.