தரவுகள் மாயமானவை தொடர்பில் உரிய விசாரணை வேண்டும்! – சஜித் வலியுறுத்து.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் காணாமல்போயுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன எனவும், இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி விசாரணைகள் இடம்பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் இன்றுகேள்வி எழுப்பி உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு வலியுறுத்தியதுடன் மேலும் கூறுகையில்,
“தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல்போயுள்ளன. அதன் முழுப் பொறுப்பையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநரின் கை தவறுதால் நடந்தது எனத் தெரிவித்து அதனை நலினப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான அவதானமிக்க நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
பல்வேறு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதியை வழங்கியுள்ளமை, மருந்துகளைக் கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருத்தி விசாரணைகள் இடம்பெற வேண்டும்.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தரவுகள் காணாமல் போயுள்ளமை ஒரு சதித்திட்டம் என்று உதவி சொலிஸ்டர் ஜெனரல் கூறியுள்ளார். மருந்து மாபியாக்களால் திட்டமிட்டு இந்தச் சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில் இது குறித்து அரசு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். விசாரணைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள விடயங்களை பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும்” – என்றார்.