வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்

வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நேற்றும் சில இடங்களில் கன மழை பெய்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.‘

இந்நிலையில், நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை (26ஆம் தேதி) வரை தமிழகத்தில் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல், நாளை மறுதினமும் சனிக்கிழமையும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், கலசப்பாக்கம் 13 செ.மீ., வாணியம்பாடி, செய்யார் தலா 11 செ.மீ., டி.ஜி.பி. அலுவலகம் 10 செ.மீ., ஆரணி, தரமணி தலா 9 செ.மீ., போச்சம்பள்ளி, நந்தனம் தலா 8 செ.மீ. என தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்துள்ளது.

 

Leave A Reply

Your email address will not be published.