மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு.
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், சேருவில மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் நீண்டகாலமாக தமது காணிகளில் வசித்து வரும் மக்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு உரிய பிரதேச செயலகங்களில் இளைஞர் மற்றும் விளையாட்டு, அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷவின் தலைமையில் நடைபெற்றது.
கடந்த முப்பது ,நாற்பது வருடங்களுக்கு மேலாக குறித்த மக்கள் உரிய காலங்களில் வசித்து வருவதாகவும் பல்வேறு தடவைகள் தமக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அந்த கனவு நனவாகவில்லை என்றும் தங்களுடைய கனவு நீண்ட காலத்திற்குப் பின்னர் இன்று நிறைவேற்றப்பட்டமை குறித்து அரசாங்கத்துக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக இதன்போது உரிய மக்கள் தெரிவித்தனர்.
மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையிலான பிரதேச செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மிகக் குறுகிய காலத்தில் குறித்த மக்களுடைய காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்தமை குறித்து இதன்போது அமைச்சர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இவ் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இதுவரைகாலமும் தங்களுடைய காணிகளுக்கு உறுதிப்பத்திரம் இல்லாதவர்களுக்கு உறுதிப்பத்திரம் மிக விரைவில் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரையும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டை அமைப்பதற்கான அனுமதிக் கடிதமும் இதன்போது அமைச்சர் அவர்களினால் உரிய பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் மாண்புமிகு பிரதம மந்திரி தலைமையிலான அரசாங்கத்தினால் தமக்கென சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்களுக்கு தமக்கான ஒரு சொந்த வீடு வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் வீடற்றவர்களின் விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களது தேவைகள் கிரமமான முறையில் கட்டம் கட்டமாக வழங்கப்படும் எனவும் பாரிய சவாலான கோவிட் வைரஸுக்கு மத்தியிலும் அரசாங்கம் மக்களுக்கான அபிவிருத்தி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்து வருவதாக இதன்போது அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சர் தேனுக விதானகமகே, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில நுவன் அத்துகோரல, மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள, பிரதேச அரசியல் தலைமைகள் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.