தோல்விக்கு இதுதான் காரணம் ரோஹித் வருத்தம்.
ஐபிஎல் தொடரின் 34-ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் டிகாக் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தால் சிறப்பான துவக்கம் பெற்றது. ரோஹித் 33 ரன்களையும், டிகாக் 55 ரன்களையும் குவித்தனர்.
அதன் பின்னர் மிகப்பெரிய குவிப்பிற்கு மும்பை அணி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர் முடிவில் அவர்கள் 155 ரன்கள் மட்டுமே குவித்தனர். பின்னர் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடத் தொடங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியின் துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் 53 ரன்களையும், ராகுல் த்ரிப்பாதி 74 ரன்களையும் குவித்து அசத்தினார். இந்நிலையில் இந்த இரண்டாம் பாதியில் மும்பை அணி தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பேசிய மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :
சில இடங்களில் நாங்கள் தவறாக செயல்பட்டு விட்டோம். இந்த போட்டியில் நாங்கள் சிறப்பாக ஆரம்பித்திருந்தாலும் இறுதிநேரத்தில் ரன் குவிக்காமல் விட்டுவிட்டோம். இந்த மைதானம் ஒரு நல்ல பேட்டிங் மைதானம் தான். ஆனால் எங்களுக்கு கிடைத்த துவக்கத்தை நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை என்றே கூறவேண்டும். அதேபோன்று இரண்டாவது இன்னிங்சில் பவுலிங்கிலும் நாங்கள் சரியாக துவக்கத்தை தர முடியவில்லை.
இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடிய ஒன்றுதான். எங்கள் அணியில் துவக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்த பின்னர் அடுத்தடுத்து சிறிது இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்ததால் ரன்களை குவிக்க முடியாமல் போனது. இந்த போட்டியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்களே காரணம் என ரோகித் சர்மா குறிப்பிட்டு கூறியது குறிப்பிடத்தக்கது.