தமிழகத்தை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலமும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குரல் எழுப்பியுள்ளது
மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மகராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டி தலைவர் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. 165 பக்கங்களை கொண்ட இந்த அறிக்கையில் தமிழகத்தில் நீட் தேர்வல் தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இல்லாத நிலை உருவாகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நீட் என்பது ஒரு சார்பு கொண்டது என்றும் பொதுவான தரநிலைகள் மற்றும் அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டதல்ல என்றும் ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ வழியில் படித்தவர்கள் நீட் தேர்வு மூலம் அதிகம் மருத்துவ படிப்பில் இடம் பெறுகின்றனர். 2015-16ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் சிபிஎஸ்இ வழியில் படித்தவர்கள் சேரும் விகிதம் பூஜ்ஜியம் சதவீதமாக இருந்தது. ஆனால் 2020-21ம் ஆண்டு காலக்கட்டத்தில் இது 26.83 சதவீதமாக உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், முதன் முறையாக மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களை விட மீண்டும் மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு (Repeaters) மருத்துவ படிப்பில் இடம் கிடைப்பதும் அதிகரித்துள்ளது. 2016-17ம் ஆண்டில் இது 12.47% இருந்த நிலையில் தற்போது 71.42 % உயர்ந்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான பயிற்சிக்காக இவர்கள் சராசரியாக ரூ.10 லட்சம் வரை செலவு செய்கின்றனர்.
இதனால் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாதபடி நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் ஏ.கே.ராஜன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்குகோரி தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த மசோதாவில், நீட் தேர்வு பணக்காரர்களுக்கு சாதகமாக உள்ளதாகவும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு எதிராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமுன்வடிவு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநரிடமிருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டை போலவே மகாராஷ்டிரா அரசும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா பட்டோல் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பட்டேல் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு அளித்த கடிதத்தில், தமிழகத்தை போல், மகாராஷ்டிராவும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ கல்லூரிக்கான சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் ஏற்பட்ட தவறுகளை அவர் சுட்டிகாட்டினார்.
நீட் தேர்வு துவங்கிய 37 நிமிடங்களில் வினாத்தாள் வெளியானது. மாணவர்கள் சார்பாக ஆள்மாறாட்டம் செய்து வேறு நபர்கள் தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பல தேர்வர்கள் மறுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.