விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்.
விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
12 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட சிறுவர்கள் கொரோனாத் தொற்றால் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் உயிரிழக்கும் விகிதத்தைக் குறைக்கும் நோக்கில் ‘பைஸர்’ தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது.
இதன் முதல் கட்டமாக கொழும்பு, குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் உள்ள விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் வாரம் முதல் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.
அத்தோடு விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களால் பீடிக்கப்பட்ட சிறுவர்களுக்குத் தடுப்பூசி வழங்கும்போது சிறுவர் வைத்திய நிபுணர்களின் அனுமதியும், முழுமையான மேற்பார்வையும் சுகாதார அமைச்சால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய இவ்வாறான சிறுவர்கள் அதிகமாகக் காணப்படும் குருநாகல் மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் இந்தத் தடுப்பூசி வேலைத்திட்டம் முதலில் ஆரம்பிக்கப்பட்டடுள்ளது என நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
எதிர்காலத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்துப் பிள்ளைகளுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது எனவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறினார்.