சரியான தீர்மானத்தை எடுக்கும் சந்தியில் நிற்கின்றது தமிழினம்.

“தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம். தற்போதைய ஜனாதிபதி, அரசு மற்றும் இலங்கை பாதுகாப்புத் தரப்பின் செயற்பாடுகள் அதற்கேற்ற வகையிலேயே இருக்கின்றன. அதனைச் சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களிலேயே உள்ளது.”
இவ்வாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இலங்கையில் தற்போதைய அரசியற் சூழ்நிலை குறித்தும் தமிழ்த் தேசியத் தரப்புகளின் ஒற்றுமையான செயற்பாட்டின் தேவை குறித்தும் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“வரலாற்றில் தோல்வியடைந்த இனமாக தொடர்ந்தும் எமது வரலாற்றை பதிவு செய்வதா? இல்லை வரலாற்றில் இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் எமது தமிழ்த் தேசிய செல்நெறியினை சரியான வழித்தடத்தில் கொண்டு சென்று எமது இலக்கை அடைய நாம் செயற்பட்டோம் என்று பதிவு செய்வதா? என்பதைத் தீர்மானிக்கும் தருணத்தில் இன்று நிற்கின்றோம்.
இந்த வாய்ப்புமிகு தருணத்தில் தமிழ்த் தேசியப் பரப்பில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களுக்கு சரியான வழித்தடத்தைக் காண்பிக்க வேண்டும். தனிப்பட்ட அமைப்பு நலன், தனிப்பட்ட கட்சி நலன், தனிப்பட்ட நபர் சார்ந்த நலன் எவையும் இது தொடர்பான தீர்மானம் எடுக்கும்போது கருத்தில்கொள்ளப்படாது தமிழ்த் தேசிய நலன் மட்டுமே கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஆனால், இடம்பெறும் நிகழ்வுகளும், நடத்தைகளும் இதற்கு முரணாகவே பளிச்சிடுகின்றன.
இது எவர் மீதும் வாசிக்கும் குற்றப்பத்திரிக்கை அல்ல. இன்றைய வாய்ப்பை எமக்காக மாற்றிக் கொள்ளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
நமது தனிப்பட்ட கட்சி, தனிப்பட்ட கூட்டு, தனிப்பட்ட செல்வாக்கை பாராளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் தேவையேற்படின் காட்டுவோம். அது ஏற்படுத்தும் பாதிப்பை விட இன்று நாம் ஒருமித்து பயணிக்காவிடில் ஏற்படும் பாதிப்பு எமக்கும், எம் இனத்துக்கும் கடந்த ஆறு தசாப்த கால எம் அரசியல் முனைப்புக்களையும் கபளிகரம் செய்து மீண்டும் பேரினவாதிகளின் கால்களில் மண்டியிடவைக்கும் என்பது மட்டும் திண்ணம் என்று என் அரசியல் அறிவு சொல்கின்றது. என் மன ஆதங்கமும் இதுவே. புரிவதும், புரிந்தும் தன்னிலையில் மாறாது தமிழ்த் தேசியத்தை அழிப்பதும், தமிழ்த் தேசியப் பரப்பில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும். இது அனைவருக்கும் சமர்ப்பணம்” என்றுள்ளது.