பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றுமுழுதாக நீக்க வேண்டும்!
“இலங்கைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை சந்திக்கின்றபோது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கவேண்டும் என்பதை நாம் வலியுறுத்துவோம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இராஜாங்க அமைச்சரால் துன்புறுத்தப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளைச் சந்தித்து பேசியிருக்கின்றோம். கடந்த 12 ஆம் திகதி மாலை 6.05 மணியளவில் சிறைச்சாலைக்குப் பொறுப்பாக உள்ள இராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்கு வந்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் உள்ள கைதிகளை தன் முன்பாக கொண்டு வந்து நிறுத்தி அவர்களை மிரட்டி அனைவரையும் முழங்காலில் நிற்க வைத்து மிக மோசமாக நடந்துகொண்ட சம்பவம் பற்றியும் அதில் இருவரை மிகவும் கூடுதலாக பயமுத்தி தன் கைத்துப்பாக்கியை அவர்களின் தலையில் வைத்து சுடுவதற்கு ஆயத்தமான விடயங்கள் அனைத்தையும் நாங்கள் நேரடியாக கேட்டறிந்துள்ளோம்.
இது தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிந்துள்ளோம். மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நியமித்துள்ள விசாரணைக்குழுவும் விசாரணை செய்கின்றது. இதனைவிடவும் கூடுதலான விசாரணைகள் இடம்பெறும் என நாம் அறிகின்றோம். இந்த சம்பவங்கள் உண்மையாக இடம்பெற்ற நிகழ்வுகள். இதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.
கடந்த நாடாளுமன்ற தினத்தில் இவ்விடயம் எழுப்பப்பட்டபோது இந்த விடயத்துக்குப் பொறுப்பாக உள்ள அமைச்சரவை அமைச்சரான நீதி அமைச்சர் அலி சப்ரி இந்தச் சம்பவங்களுக்காக மன்னிப்பு கேட்டார். இரண்டு தடவைகள் திரும்ப திரும்ப மன்னிப்பு கேட்டார். கைதிகளிடமும் அவர்களின் உறவினர்களுக்கு இதன் காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் மன்னிப்பு கேட்டார். ஆகவே, நடக்காத விடயத்துக்கு அவர் மன்னிப்பு கேட்கவில்லை.
இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் இந்த சிறைச்சாலைகளில் இருந்து தமிழ் பிரதேச சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும். கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அவர்கள் மாற்றப்பட்டு இருந்தவர்கள். எனவே, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்ற முடியாது என எவரும் சொல்ல முடியாது.
வவுனியாவில் உள்ளது விளக்கமறியல் சிறையே. அது சிறிய இடம். எனவே, முன்னர் நிர்வாகத்துக்கு தேவையானதாக யாழ்ப்பாணத்துக்கு மாற்றியிருந்தது போல இவர்களது பாதுகாப்பு கருத்தியும் விசாரணைகள் சுயாதீனமாக இடம்பெறவேண்டுமாக இருந்தால் அவர்கள் அவ்வாறான சூழலுக்குள் மாற்றப்பட வேண்டும்.
எனவேதான் அவர்கள் விசாரணைகளுக்கு முகம் கொடுக்கக்கூடியதாக இருக்கும். பயம் இல்லாமல் சாட்சியம் வழங்கக் கூடியதாக இருக்கும். வெளியில் இருக்கும் சாதாரண மக்களே சாட்சியம் வழங்க அச்சப்படும் சூழலில் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர்கள் அது குறித்து பயப்படுவது நியாயம் என்பதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படவேண்டும் என அரசிடம் கோருகின்றோம்” – என்றார்.