சன் ரைசர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி.
ஐபிஎல் டி.20 தொடரின் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
துபாய் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியில் ஐடன் மார்க்ரம் (27) மற்றும் கே.எல் ராகுல் (21) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் யாரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரன் குவிக்க தவறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் (2) முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சனும் (1) வந்த வேகத்தில் வெளியேறினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், 7வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து திருப்புமுனையை ஏற்படுத்தியதன் மூலம் ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
போட்டியின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கடைசி ஓவரில் ஹைதராபாத் அணியால் 11 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்ததால், பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் 4 ஓவரில் வெறும் 14 ரன்கள் மட்டுமே விட்டுகொத்த முகமது ஷமி இரண்டு முக்கிய விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.