விழிகளைத் திறவுங்கள் என பாடிய வர்ண இராமேஸ்வரன் விழி மூடினார் (Video)
ஈழத்து இசைக் குடும்பப் பின்னணி கொண்டு , தனித்துவமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்ட வர்ண இராமேஸ்வரன் கனடாவில் காலமானார்.
இவர் குரலில் அமைந்த சாஸ்திரிய சங்கீதப் பாடல்களாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும் கேட்பவரைத் தம் வசப்படுத்தும் வல்லமை கொண்டதாகும்.
ஈழத்து இசைக் குடும்பப் பின்னணியுடன் உள் நுழைந்திருந்தாலும், தன் தனித்துவமான குரலால் அனைவரையும் கட்டிப் போட்டவர் வர்ண இராமேஸ்வரன்.
யாழ்ப்பாணம் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் கலைமாமணி பட்டத்தைப் பெற்றவர்.
இவர் தந்தையார் சங்கீத வித்துவான் வர்ணகுலசிங்கம். இவர் தந்தையார் மறைந்த இசை மாமேதைகள் மகாராஜபுரம் சந்தானம் மற்றும் மகாராஜபுரம் விஸ்வநாதையா அவர்களின் பிரதம சீடராவார்.
தெல்லிப்பளை வரதராஜசர்மாவிடம் மிருதங்கம் பயின்றவர். மிருதங்கம், தவில், ஆர்மோனியம் ஆகிய இசைக் கருவகளை நன்கு இசைக்கக் கூடிய பல்துறைக் கலைஞராக விளங்கினார் வர்ண ராமேஸ்வரன்.
இளமையிலே இசைப் பரிச்சயம் உடைய வர்ண ராமேஸ்வரன் அவர்கள் மிருதங்க வித்துவான் சிவபாதம், பாடகி பார்வதி சிவபாதத்தின் உறவினரும் கூட.
தெல்லிப்பளை மகாஜானக் கல்லூரியல் கல்வி கற்ற வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு அளவையூர் விநாசித்தம்பிப் புலவரின் கதாப் பிரசங்கத்திற்கு மிருதங்கம் வாசிக்கும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
அளவையூர் விநாசித்தம்பிப் புலவர் தான் தந்தையாரின் பெயரின் முற்பகுதியையும் இணைத்து வர்ண ராமேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார்.
கவிஞர் புதுவை இரத்தினதுரையின் வரிகளில் உருவான நல்லை முருகன் பாடல்கள், மற்றும் திசையெங்கும் இசை வெள்ளம், ஊர் போகும் மேகங்கள் என தாயக மண் வாசம் கமழும் இறுவட்டுக்களை வர்ண இராமேஸ்வரன் வெளியிட்டிருக்கிறார்.
உலகத் தமிழர் மத்தியில் “எங்கே எங்கே ஒரு தரம் உங்கள் விழிகளைத் திறவுங்கள்’ எனக் கேட்கின்ற போதே கண்ணீரை வர வைக்கின்ற துயிலுமில்லப் பாடலான “தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” பாடல் ஊடாக நன்கு பரிச்சயமானவர்.
பல்வேறு வித்துவான்களையும், கலைஞர்களையும் தந்த யாழ்ப்பாணத்தின் வடபால் அமைந்துள்ள அளவெட்டி எனும் கிராமத்திற்கு அருகே உள்ள சிறுவிளான் எனும் சிற்றூர் தான் இக் கலைஞன் பிறந்த மண், பின் யாழ்ப்பாணம் , வன்னி , கொழும்பு என வாழ்ந்து கால ஓட்ட மாற்றத்தில் புலம்பெயர்ந்து அவர் இறக்கும் வரை கனடாவில் வசித்து வந்தார்.
பல்துறைக் கலைஞரான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் , யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இசை விரிவுரையாளராக இருந்திருக்கிறார், தென் இந்தியாவில் சென்னையிலும் இசை பயின்றுள்ளார்.
வர்ணம் எனும் இசைப் பள்ளியினையும் கனடாவில் நடாத்தி வந்துள்ளார்.
நிதர்சனப் பொறுப்பாளராக பரதன் அவர்கள் இருந்த காலத்தில் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் அழைக்கப்பட்டு , பூபாளம் பாடும் நேரம் , பூ மலர்ந்தது கொடியினில் என இவ் இரு பாடல்களையும் பாடுவதற்கு பயிற்சி எடுத்துவருமாறு அனுப்பப்படுகின்றார். தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த ஒலிப்பதிவு தடைப்பட்டு பாடல்கள் இரண்டும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கத்திர்ற்கு வழங்கப்படுகின்றது.
பின்னர் புதுவை இரத்தினதுரையின் அழைப்பின் பேரில் விழித்தெழுவோம் (1992) ஒலி நாடாவில் புறமொன்று தினம் பாடும் பெண் புலிகள்,
கரும்புலிகள் ஒலி நாடாவில் தாயக மண்ணின் காற்றே,
எதிரியின் குருதியில் குளிப்போம், பூநகரி வெற்றிச் சமர் ஒலி நாடாவில் அப்புகாமி பெற்றெடுத்த லொகு பண்டா மள்ளி, போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு அவருக்கு ஏற்படுகின்றது. இதன் பின்னர் புதுவையர் வர்ண ராமேஸ்வரன் கூட்டணியில் நல்லை முருகன் பாடல்கள் ஒலிநாடா வெளியாகின்றது.
1992ம் ஆண்டு கிளாலி கடல் நீரேரிப் பாதையில் இடம் பெற்ற மோதல் காரணமாக பாடகர் சாந்தன் அவர்கள் வன்னிக்குள் சிக்கிக் கொள்ள, அவர் யாழிற்கு வர வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த புதுவை இரத்தினதுரை அவர்களிற்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.
உடனடியாக புதுவையர் வர்ண ராமேஸ்வரனை தன் இல்லத்திற்கு அழைக்கிறார். முக்கியமான ஓர் பாடல், நீதான் இதனைப் பாட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றார்.
”எங்கே எங்கே ஒருதரம் உங்கள் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்”
அவர் இந்த வரிகளைப் பாடும் போதே புல்லரித்துப் போனதாய் வெளிச்சத்திற்கான ஓர் செவ்வியில் பகிர்ந்திருந்தார்.
புதுவையர் சாய்மனைக் கட்டிலில் அமர்ந்தவாறு இன்னுமொருக்காப் பாடும் ஐசே எனக் கேட்டுக் கேட்டுக் கொண்டாராம். இப்படி 3 தடவைகள் கேட்ட பின் 10 நிமிடங்கள் மௌனமாய் புதுவையர் இருந்தாராம், இறுதியில் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து மறுநாள் மாலை ஐந்தரை மணிக்கு ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டார்.
இசைவாணர் கண்ணன் ஆர்மோனியம், சதா வேல்மாறன் தபேலாவுடனும், ஜெயராமன் வயலினுடனும் இசையமைக்க பாடல் ஒலிப்பதிவு ஆரம்பமாகின்றது. அருகே நின்றிருந்த மேஜர் சிட்டு, ராதிகா, மணிமொழி போன்ற கலைஞர்களும் இப்பாடலை முணு முணுக்க ஆரம்பிக்க ”எங்கே எங்கே” என்ற வரிகளை எல்லோரும் சேர்ந்தே பாடுங்கள் என புதுவை இரத்தினதுரை அவர்கள் கூறுகிறார்.
ஒலிப்பதிவு முடியும் போது காலை 03 மணி, ஆனால் பாடகர் சாந்தன் அவர்கள் தவற விட்ட, இந்த ஓர் பாடல் , வர்ண ராமேஸ்வரனின் குரலால் உயிர் பெற்று ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாக அமையப் போகின்றது என்பதை அப்போது அங்கிருந்த எந்த ஓர் கலைஞர்களும் அறிந்திருக்கவில்லை.
1992ம் ஆண்டு மாவீரர் நாளின் இறுதி நாள், புதுவையரைச் சந்திக்க வந்திருந்த வர்ண இராமேஸ்வரன் அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது.
புதுவையர் ராமேஸ்வரனை கட்டித் தழுவிப் பாராட்டினார், சிறிது நேரத்தில் காக்கா அண்ணை வந்து தலைவரே பாடல் கேட்டு வியந்திருப்பது பற்றி பகிர்ந்து கொண்டார். பின்னர் 11.30 மணியளவில் சு.ப தமிழ்ச் செல்வனும் வந்து பாராட்டினார்,
இவர்கள் அனைவரையும் ஏற்றிக் கொண்டு வாகனம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி விரைந்தது. 12 மணியானதும் கோவில்களில் மணி ஒலிக்க , புலிகளின் குரலில் துயிலுமில்லப் பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது. அந்தப் பாடலிற்கான மகிமை – மகத்துவம் அப்போது உணரப்படுகின்றது.
நெய் விளக்கு ஏற்றப்படும் அதே சமயத்தில் வர்ண ராமேஸ்வரனையும் பாடலைச் சேர்ந்தே பாடுமாறு புதுவையர் கேட்டுக் கொண்டார். அந்தக் குரலும், குரலினால் வெளிப்பட்ட பாவங்களும் கேட்போர் அனைவரையும் – ஏன் கல் நெஞ்சங்களையும் கரைக்கும் வல்லமை கொண்டவையாக விளங்கியது என்றால் மிகையல்ல.
இது தவிர மெல்லிசைப் பாடல்களால் நம் மத்தியில் நன்கு பரிச்சயமானவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள்,
”மறந்து போகுமோ மண்ணின் வாசனை”,
”வாசலிலே அந்த ஒற்றைப் பனை மரம்”,
ஊருக்கு மீளும் கனவு உனக்கில்லையா தமிழா? ”
இப்படிச் சில பாடல்களைக் குறிப்பிடலாம்,
இசைத் தமிழ் உலகிற்கு வர்ண ராமேஸ்வரனின் இழப்பு – பேரிழப்பு
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம்.
தேடல் , எழுத்துருவாக்கம் : கமலேஷ்