65 மணி நேர அமெரிக்க பயணத்தில் 24 சந்திப்புகளை அரங்கேற்றி அசரவைத்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தனது 65 மணி நேர அமெரிக்க பயணத்தில் 24 சந்திப்புகளை அரங்கேற்றி, தனது பயணத்தை பயனுள்ளதாக மாற்றியிருக்கிறார்.

குவாட் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காகவும், 76வது ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவும் டெல்லியிலிருந்து கடந்த செப்டம்பர் 22ம் தேதி அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி. 3 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மீண்டும் டெல்லி வந்தடைந்திருக்கிறார்.

பிரதமர் மோடி தனது 3 நாள் பயணத்தில் 24 சந்திப்புகளை நடத்தி தனது பயண நேரத்தை பயனுள்ளதாக மாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. அனைத்து வெளிநாட்டு பயணங்களையும் பயனுள்ளதாக ரத்தின சுருக்கமாக அமைத்துக் கொள்வது மோடியின் பாணியாகும். அந்த வகையில் செப்டம்பர் 22ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டனுக்கு புறப்பட்ட போது விமானத்தில், என்னற்ற அலுவலக கோப்புகளை கிளியர் செய்திருக்கிறார். அதில் தனது அதிகபட்ச பயண நேரத்தை செலவிட்டிருக்கிறார், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த பயண நேரத்தில் இரண்டு சந்திப்புகளையும் அவர் நடத்தியிருக்கிறார்.

வாஷிங்டனில் தரையிறங்கி ஓட்டலை அடைந்த போது மேலும் 3 சந்திப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.

மறுநாளான செப்டம்பர் 23ம் தேதி, புகழ்பெற்ற ஐந்து நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் தனித்தனியாக பிரதமர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்து அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிசையும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசனையும், ஜப்பான் அதிபர் யோஷிடே சுகாவையும் சந்தித்து பேசியிருக்கிறார். இதன் பின்னர் மோடி தனது டீமுடன் 3 சந்திப்புகளை நடத்தினார்.

இதனைத்தொடர்ந்து செப்டம்பர் 24ம் தேதியன்று, மேலும் 4 சந்திப்புகளை அவர் நடத்தினார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதல் முறையாக நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசினார். அதன் பின்னர் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.

செப்டம்பர் 25ம் தேதி வாஷிங்டனில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்த போது விமானத்தில் 2 நீண்ட சந்திப்புகளை நடத்தினார். இப்படி தனது பயண நேரம் முழுதும் பயனுள்ள சந்திப்புகளை பிரதமர் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி வந்தடைந்த பின்னரும் பிரதமர் மோடி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். முன்னதாக அவர் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.

 

Leave A Reply

Your email address will not be published.