அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மிக அவசியம்.

“இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்காகப் புலம்பெயர் தமிழர்களை நோக்கி தனது நேசக்கரங்களை நீட்டுவதற்கு அரசு எதிர்பார்த்துள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.”
இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையில் உள்ள தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் என்று அரசிடம் பாரபட்சம் எதுவும் இல்லை. அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள்தான்.
அரசு குறித்து எவருக்காவது தவறான கருத்துக் காணப்பட்டால் அந்த விடயங்களுக்குத் தீர்வைக் காண்பதற்காக பேச்சு மேசைகளுக்கு வரத் தயார்.
கட்சி என்ற அடிப்படையிலும் அரசு என்ற அடிப்படையிலும் இன – மத பாகுபாடின்றி அனைத்து இனத்தவர்களையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எங்களுக்கு உள்ளது. நாங்கள் இது குறித்து திறந்த மனதுடன் இருக்கின்றோம்.
2009ஆம் ஆண்டில் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரம் பாதுகாக்கவில்லை. நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்துள்ளோம்” என்றார்.