தமிழ் அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த நீதி அமைச்சர்!
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை நீதி அமைச்சர் அலி சப்ரி நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இன்று அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற அமைச்சர், அங்கு அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவால் ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளைச் சந்தித்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர்,
“இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, அநுராதபுரம் சிறைச்சாலையில் தம்மை முழந்தாளிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவமானது இன ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்லவென தமிழ் அரசியல் கைதிகள் புரிந்துகொண்டுள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளில் தேவையற்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை.
மனித உரிமைகள் ஆணைக்குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தபோது, சிறைச்சாலை அதிகாரிகளோ அல்லது வேறு தனிநபர்களோ அழுத்தங்களைப் பிரயோகித்தார்களா என்பது தொடர்பில் தமிழ் அரசியல் கைதிகளிடம் விசாரித்தேன்.
எனினும், யாரும் தமக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என தமிழ் அரசியல் கைதிகள் என்னிடம் கூறினர். ஆகவே, இந்த சம்பவத்தை அரசியல் ஆக்க வேண்டிய தேவையில்லை.
தமிழ் அரசியல் கைதிகளுக்குச் சிறைச்சாலையில் பாதுகாப்பு தொடர்பிலோ, வசதிகள் தொடர்பிலோ பிரச்சினை இல்லை என்றே கூறினர். தமது சொந்த இடங்கள் அருகில் இருப்பதாலேயே அவர்கள் யார்ப்பாணத்துக்குச் செல்ல வேண்டும் என்று கோருகின்றனர்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் பாதுகாப்புப் பிரச்சினை இருக்குமாக இருந்தால், உயர் பாதுகாப்பு இடத்துக்கு அனுப்ப முடியும் என்று தமிழ் அரசியல் கைதிகளிடம் நான் கூறினேன்” – என்றார்.