கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது
கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்று ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வாயிலாக மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
பண்டிகைகள் தொடா்ந்து வருவதால் கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் அவா் கேட்டுக்கொண்டாா்.
செப்டம்பா் மாதத்துக்கான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பானது. அதில் பிரதமா் மோடி பேசியதாவது:
கொரோனா தொற்று பரவல் மக்களுக்குப் பல படிப்பினைகளை வழங்கியிருக்கிறது. உடல்நலத்தைப் பேணுதல், நலவாழ்வை முன்னெடுத்தல் ஆகியவை குறித்த ஆா்வம் மக்களிடையே அதிகரித்திருக்கிறது. உள்நாட்டு மூலிகைகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனா்.
பண்டிகை காலம் நெருங்கியிருக்கிறது. கண்ணியமே உருவெடுத்த கடவுளான ராமா், பொய்மைக்கு எதிராக பெற்ற வெற்றியை நினைவுகொள்ளும் விஜயதசமி திருநாளை நாடு முழுவதும் கொண்டாடும். ஆனால், இந்தக் கொண்டாட்டத்தின்போது மேலும் ஒரு போராட்டத்தை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவதில் நாடு பல சாதனைகளைப் படைத்துவிட்டது. இதைப் பற்றித்தான் உலகெங்கும் பேச்சாக இருக்கிறது. கொரோனாவுக்கு எதிரான போரில், குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பான பங்களிப்பு இருக்கிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல், தடுப்பூசியின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து யாரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் வசிக்கும் பகுதிக்கு அருகே யாருக்காவது தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்றால், அவரையும் அருகே இருக்கும் தடுப்பூசி மையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
காந்தியடிகளுக்கு அஞ்சலி: சிறிய முயற்சிகள்கூட சில வேளைகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். காந்தியடிகள் தனது வாழ்க்கையில் சிறிய விஷயங்களுக்குக் கூட முக்கியத்துவம் அளித்தாா். அவா் தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டினாா். இத்தனை தசாப்தங்களுக்குப் பின்னா், தூய்மை இந்தியா இயக்கமானது மீண்டும் ஒருமுறை நாட்டை இணைக்கும் பணியைச் செய்திருக்கிறது.
தலைமுறை தலைமுறையாக தூய்மை தொடா்பாக விழிப்போடும், சோா்வடையாமலும், அா்ப்பணிப்பு உணா்வோடும் செயல்பட வேண்டும். தூய்மை என்ற பேரியக்கத்தை மக்கள் தொடர வேண்டும். அதுவே காந்தியடிகளுக்கு மக்கள் அளிக்கும் மிகப் பெரிய அஞ்சலி.
பொருளாதாரத் தூய்மை ஏழைகளின் உரிமைகளை உறுதிப்படுத்தி வாழ்க்கையை எளிமையாக்கியிருக்கிறது. ‘ஜன் தன்’ வங்கிக் கணக்குகள் காரணமாக, ஏழைகளுக்கான தொகை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்குகளைச் சென்றடைகின்றன. அதனால், ஊழல் போன்ற தடைகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.
அதிகரிக்கும் இணையவழி பணப் பரிவா்த்தனை: மக்களிடையே இணையவழி பணப் பரிவா்த்தனைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஆகஸ்டில் மட்டும் சுமாா் 350 கோடிக்கும் மேற்பட்ட இணையவழி பரிவா்த்தனைகள் நடைபெற்றுள்ளன. சராசரியாக ரூ.6 லட்சம் கோடிக்கு அதிகமான பணப் பரிவா்த்தனை யுபிஐ வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், விடுதலைப் போராட்டத்தின்போது காதிக்கு இருந்த பெருமையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபா் 2-ஆம் தேதி காதிப் பொருள்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும். காதிப் பொருள்கள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
நாட்டுக்கு ஊக்கமளிக்கும் மாற்றுத் திறனாளிகள்: கடல்மட்டத்தில் இருந்து சுமாா் 15,000 அடிக்கு மேல் இருக்கும் சியாச்சின் பனிச்சிகரத்தில் 8 மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குழு அண்மையில் ஏறி சாதனை படைத்திருக்கிறது. உடல்ரீதியிலான சவால்களையும் தாண்டி, மாற்றுத்திறனாளிகள் புரிந்திருக்கும் சாதனை நாட்டுக்கே ஊக்கமளிக்கிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, செப்டம்பா் 25-ஆம் தேதி உலகின் மிகப்பெரிய உடல்நலப் பாதுகாப்புத் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ தொடங்கப்பட்டது. தற்போது வரை 2 கோடிக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கு அத்திட்டத்தின்கீழ் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சை இலவசமாகக் கிடைத்திருக்கிறது என்றாா் பிரதமா் மோடி.
‘உலக நதிகள் தினம்’ ஞாயிற்றுக்கிழமை (செப். 26) கொண்டாடப்படுகிறது. நதிகளைத் தூய்மைப்படுத்தி, மாசு நீக்கும் பணியை அனைவரது முயற்சியோடும் ஒத்துழைப்போடும் மக்கள் செய்ய வேண்டும். நதியைத் தூய்மையாக வைத்துக் கொள்வது தொடா்பாக மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது.
நாடெங்கிலும் உள்ள நதிகளை மீண்டும் உயிா்ப்பிக்கவும், அவற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அரசும் சமூக சேவை அமைப்புகளும் தொடா்ந்து சேவையாற்றி வருகின்றன. இதில் தமிழகத்தின் வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்கள் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன. அந்தப் பகுதிகளில் பாய்ந்த நாக நதி, பல ஆண்டுகளுக்கு முன்பே வடுவிட்டது. அதனால் அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் குறைந்தது. ஆனால், அங்கே இருக்கும் பெண்கள் அந்த நதியை உயிா்ப்பித்தாா்கள். மக்கள் பங்களிப்பு வாயிலாக கால்வாய்களைத் தோண்டி, தடுப்பணைகளைக் கட்டினாா்கள்; குளங்களை வெட்டினாா்கள். அவற்றின் பயனால் நாக நதி நீா் நிரம்பி இருக்கிறது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்டுக்கொரு முறையாவது நதித் திருவிழாவை மக்கள் கொண்டாட வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.