சிறை வைக்கப்பட்டிருந்த ஹூவாய் பெண் அதிகாரி விடுதலை.
கனடாவில் சிறை வைக்கப்பட்டிருந்த, சீனாவைச் சேர்ந்த ஹூவாய் என்ற மொபைல் போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெண் அதிகாரி மெங் வான்ஜூ, மூன்று ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு சீனாவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.சீனாவைச் சேர்ந்த ஹூவாய் நிறுவனத்தின் தலைவர் ரென் ஜெங்பெய்யின் மகளும், நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங் வான்ஜூ (49), கடந்த 2018ல் கனடாவில் கைது செய்யப்பட்டார்.
வங்கி மோசடியில் ஈடுபட்டதாகவும், அமெரிக்காவின் தடையை மீறி ஈரான் நாட்டில் தொழில் செய்ததாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.அமெரிக்கா, சீனா இடையே வர்த்தகம் தொடர்பாக பெரும் மோதல் வெடித்திருந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதிபதியாக இருந்த டொனால்டு டிரம்பின் உத்தரவால் அவர் கைது செய்யப்பட்டார்.
அதற்கடுத்த சில நாட்களில், கனடாவைச் சேர்ந்த முன்னாள் துாதரக அதிகாரிகளும், தொழிலதிபர்களுமான மைக்கேல் கோவ்ரிக் மற்றும் மைக்கேல் ஸ்பேவர் ஆகியோர் உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த மெங் வான்ஜூவை விடுதலை செய்வதற்காக சீனா முயற்சி மேற்கொண்டது.
அமெரிக்காவுடன் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தை அடுத்து, மெங் விடுதலை செய்யப்பட்டார்.சீன அரசு அனுப்பிய சிறப்பு விமானம் வாயிலாக சென்ஜென் விமான நிலையத்துக்கு அவர் நேற்று வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.இதே நேரத்தில், கனடா தொழிலதிபர்களான கோவ்ரிக் மற்றும் ஸ்பேவர் ஆகியோரை சீனா விடுதலை செய்துள்ளது. இந்த தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ தெரிவித்துள்ளார்.