ஏஞ்சலா மெர்க்கலின் கட்சியை வீழ்த்தி குறைந்த வித்தியாசத்தில் எஸ்.பி.டி. வெற்றி!
ஜேர்மனி கூட்டாட்சித் தேர்தலில் மைய – இடதுசாரி கட்சியான ஜேர்மனி சோசியல் டெமோக்ரட்ஸ் கட்சி (SPD) குறுகிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முன்னணி தோ்தல் முடிவுகளின்படி பதவியில் இருந்து வெளியேறும் சாஞ்சலர் ஏஞ்சலா மெர்க்கலின் கட்சி தோல்வியடைந்துள்ளது.
ஜேர்மனி சோசியல் டெமோக்ரட்ஸ் கட்சி 25.7% வாக்குகளைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் சான்சலர் ஏங்கலா மெர்கலின் ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1% வாக்குகளைக் பெற்றது.
பசுமைக் கட்சியினர் அக்கட்சி வரலாற்றில் இல்லாதளவுக்கு 14.8% வீத வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
இந்நிலையில் அரசாங்கத்தை அமைக்க இப்போது கூட்டணி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
மெர்கலுக்கு அடுத்ததாக கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி சார்பில் சான்சலர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டுள்ள ஆர்மின் லஷெட் தாம் ஆட்சி அமைப்பது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆனால் தங்களுக்கு ஆட்சி அமைக்க முழு ஆதரவு கிடைத்துள்ளது என்று சோசியல் டெமாக்ரட்ஸ் கட்சியின் ஒலாஃப் ஷோல்ட்ஸ் கூறியுள்ளார்.
இந்தத் தோ்தலில் மிகக் கடும் போட்டி இருக்கும் என தோ்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இந்தத் தேர்தல் ஆரம்பத்தில் இருந்தே கணிக்க முடியாததாக இருந்தது.
இந்த தேர்தலில் நாட்டின் தலைவர் பதவிக்கு சான்ஸ்லர் ஏஞ்சலா மெர்கல் போட்டியிடவில்லை. இவரின் இந்த முடிவு காரணமாக மக்கள் இடையே ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சிக்கு பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட்டது.
அதேபோல் நாட்டின் பொருளாதாரம், வேலைவாய்ப்புயின்மை, அரசியல் நிலையற்றதன்மை, சீனாவுடன் மோதல் என சர்வதேச நிலைப்பாடுகளில் ஜேர்மனியின் சறுக்கல் என்று பல்வேறு காரணங்களால் ஆளும் ஏஞ்சலா மெர்கலின் கட்சிக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் அவர் இந்த தேர்தலை ஏஞ்சலா மெர்கல் தவிர்த்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.