தசைநார் சிதைவு நோயால் சிறுமி பாதிப்பு…16 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி…தமிழக அரசின் உதவியை நாடும் சிறுமியின் பெற்றோர்
தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சேலம் சிறுமி ஸ்ரீஷாவின் சிகிச்சைக்கு தேவையான தடுப்பூசியின் விலை ரூ.16 கோடி என்று கூறப்படும் நிலையில், தமிழக அரசின் உதவியை சிறுமியின் பெற்றோர் நாடியுள்ளனர்.
மரபணு ரீதியாக நியூரான்கள் பாதிக்கப்பட்டு இறப்பதைத் தான் முதுகெலும்புத் தசைநார் வலுவிழப்பு நோய் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மோட்டார் நியூரான்கள் இறப்பதால், கை மற்றும் கால்கள் செயலிழந்துவிடும். அத்தோடு, பாதிப்பு தீவிரமடைந்து உயிரிழப்பு நேரிடும். இந்த நோயின் முதல் வகை பாதிப்பானது, குழந்தை பிறந்த சில மாதங்களில் தீவிரமாகி, உடலில் எதிர்ப்பு சக்தியை குறைத்து ஒரு வயதுக்குள் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
இந்திய அளவில் இந்நோய்க்கான சிகிச்சைகள் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது. இந்நோய்க்கான ஒரே தீர்வாக அமெரிக்காவில் மட்டுமே ஒரு ஊசியின் விலை 16 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த மருந்து, உயிரிழக்கும் நியூரான்களுக்கு பதிலாக புதிய நியூரான்களை மரபணுவில் நிரப்புகின்றன. உலகளவில் இந்த ஊசி செலுத்திக்கொள்ளும் நோயாளிகள், நல்ல பலனடைவதாக தெரிகிறது.
சமீபத்தில் நாமக்கல், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டப்பட்டது. தற்போது சேலத்திலும் ஒரு குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு அரசு உதவியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் இவரது மனைவி ஜெயந்தி இவர்களுக்கு 9 மாதத்தில் பெண் குழந்தை (ஸ்ரீஷா) ஒன்று உள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு ஐந்து மாதம் ஆன நிலையில் குழந்தையின் தலை நிற்காததால் மருத்துவரின் சோதனைக்கு உட்படுத்தினர் மேலும் பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஒரே தீர்வு 16 கோடி ரூபாய் மதிப்பிலான தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என்றும் இரண்டு வருடத்திற்குள் தடுப்பூசி செலுத்தாவிட்டால் குழந்தையை காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குழந்தையின் தாயார் ஜெயந்தி, “ நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர்கள். எங்கள் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பூசி மற்றும் மருந்து செலுத்தினால் மட்டுமே குழந்தையை காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியில்லாமல் இருப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மனது வைத்தால் மட்டுமே தங்கள் குழந்தையை காப்பாற்ற முடியும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.