ராஜஸ்தானில் நடைபெற்ற ரீட் தேர்வில் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்திக் காப்பியடிக்க முயன்ற சம்பவம் – 5 பேர் கைது!
ராஜஸ்தானில் நடைபெற்ற ரீட் தேர்வில் ப்ளூடூத் செருப்பு மூலம் முறைகேடு நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரீட் என்பது (Rajasthan Eligibility Exam for Teachers) ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு. இது ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக ஆவதற்கு REET தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அரசுப் பள்ளிகளில் 31,000 பணியிடங்களுக்கான தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். மேலும் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் செருப்பில் ப்ளூடுத் பயன்படுத்திக் காப்பியடிக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிகானர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் அஜ்மீர் என்ற நபர் முதலில் கண்டறியப்பட்டார். அவரது காலணியில் ப்ளூடூத் கருவி இருந்தது கண்டுபிக்கப்பட்டது. இதுகுறித்து மாநிலம் முழுவதும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து இதேபோல மேலும் நான்கு பேர் கண்டுபிடிக்கப்பட்டு தேர்வு அறையில் இருந்து அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் இந்த 5 நபர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த ஒரு செருப்பின் விலை ரூ. 6 லட்சம் என்றும் இதனை 25 பேர் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இதனை விற்பனை செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரி ரத்தன் லால் பார்கவ், முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் செருப்பில் ஒரு ப்ளூடூத் சாதனம் இருந்ததாகவும், அவர்களின் காதுக்குள் ஒரு சிறிய சாதனம் இருந்தது என்றும் விளக்கினார். மேலும் தேர்வு அறைக்கு வெளியில் இருந்து யாரோ அவர்களுக்கு உதவியதாகவும் அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ப்ளூடூத் செருப்பில் பிரத்யேகமாக ஒரு காலிங் டிவைஸ் இருக்கும். அதிலிருந்து குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் மறுமுனையில் பேசும் நபருக்கு ஏற்கெனவே கேள்வித்தாள் சென்றிருக்கும். அவர் அங்கிருந்து கேள்வி 1க்கு A, 2க்கு D என்றெல்லாம் கூறுவார். அது தேர்வு எழுதும் நபரின் காதுக்குள் இருக்கும் சிறிய ப்ளூடூத் டிவைஸ் மூலம் அவர் காதில் கேட்கும்.
இந்த சாதனத்தை யாரும் பார்க்க முடியாது அவ்வளவு சிறிய சாதனம் இது என்று கூறப்படுகிறது. ப்ளூடுத் பயன்படுத்தி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறை தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும் நிலையில் அடுத்த தேர்வில் தேர்வர்கள் செருப்பு அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.