நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு
மாநிலங்களவை உறுப்பினர்களாக கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதேபோல, மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். கே.பி.முனுசாமியின் எம்.பி. பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி முடிவடைவதாக இருந்தது.
அதுபோல வைத்திலிங்கத்தின் பதவி காலம் அடுத்த ஆண்டு 2022 ஜூன் 29ஆம் தேதி முடிவதாக இருந்தது. 2 பேரும் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த இடத்தை நிரப்ப இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவித்தது. இதில், திமுக தனது வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி மற்றும் ராஜேஷ்குமாரை நிறுத்தியது.
திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு என்பதால், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களாக திமுகவின் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் மாநிலங்களவையில் திமுக எம்.பிக்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பாஜக சார்பில் நிறுத்தப்பட்டார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த 21ஆம் தேதி மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் எல்.முருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில், எல்.முருகன் போட்டியின்றி எம்பியாக தேர்வாகியுள்ளார். வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் எல்.முருகன் போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வான சான்றிதழ் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.