ஏ.ரி.எம். இயந்திரத்தை உடைத்து பெருந்தொகை பணம் கொள்ளை.

அநுராதபுரம் மாவட்டம், மின்னேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மினிஹீரிகம பிரதேசத்தில் தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து பெரும் தொகைப் பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் பதிவாகியுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஹபரண- பொலனறுவைக்கு வீதிக்கு அருகிலுள்ள அரச வங்கி ஒன்றின் தன்னியக்கப் பணப்பரிமற்ற இயந்திரத்தில் பணம் கொள்ளையிட்டமை தொடர்பில் ஹங்குரத்கொட அரச வங்கியின் முகாமையாளரால் மின்னேரியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த 24ஆம் திகதி லொறி ஒன்றில் குறித்த தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்துக்கு அருகில் வந்த ஒரு குழுவினர், குறித்த தன்னியக்கப் பணப்பரிமாற்ற இயந்திரத்தின் தகடை வெட்டி எடுத்ததுடன் பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.