பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கௌதாரிமுனையில் வயல்காணி அளவீட்டுப் பணி!
கௌதாரிமுனை பகுதி பயனாளிகளுக்கு வயல் காணிகளை வழங்குவதற்கான காணி அளவிடும் பணிகள், மாவட்ட ஒருங்கிணைப்புக்குக்குழுவின் மேற்பார்வையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சர் கெளரவ டக்ளஸ் தேவனாந்தா அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் கௌதாரிமுனை பிரதேசத்துக்குச் சென்றிருந்தபோது அந்தப் பகுதி மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, சுமார் 100 ஏக்கர் வயல் காணியை காணிகளற்ற மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் வழங்குமாறு அவர் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இதன் பிரகாரம், பொருத்தமான பயனாளிகளைத் தெரிவுசெய்த பூநகரி பிரதேச செயலகம், அவர்களுக்கு காணியை பகிர்ந்தளிப்பதற்காக காணி அளவீட்டுப் பணிகளை அண்மையில் மேற்கொண்டது.
பூநகரி பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற காணி அளவீட்டுப் பணிகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் மேற்பார்வை செய்துவந்தனர்.
எதிர்வரும் காலபோகத்துக்கு நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்தக் காணிகளை உழுது பண்படுத்திக் கொடுக்குமாறு கமநலசேவைகள் திணைக்களத்திடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கமைய, கமநல சேவைகள் ஆணையாளர் தேவரதன் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, இதற்கான நிதியொதுக்கீடுகளைப் பெற்று காணிகளை உழவு இயந்திரம் மூலம் உழுது பண்படுத்தும் பணிகளை தற்போது கமநல சேவைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.