யாழ். மாநகர சபை அமர்வில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி.

யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
யாழ். மாநகர சபைபின் மாதாந்த அமர்வு மாநகர சபையின் மேயர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்போது சபையின் ஆரம்பத்தில் தியாக தீபம் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23ஆம் திகதி யாழ். மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தைப் பொலிஸார் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, யாழ். மாநகர சபை அமர்வில் இன்று நடைபெற்ற தியாக தீபம் திலீபனுக்காக அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.