SALE ஶ்ரீலங்கா SALE…! உறக்கமா தேசபக்தர்களே! : உபுல் ஜோசப் பெர்னாண்டோ
1994 இல் சந்திரிகாவின் PA அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதில் அப்போதைய இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஃபரிஷிட்டா பெரும் பங்கு வகித்தார்.
1994 இல் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியை அவர் அழைத்தார். அவர் அரசாங்கத்திற்கு பெரும் அழுத்தம் கொடுத்தது மட்டுமல்லாமல் தேர்தல் இரவில் பிரதமர் வேட்பாளர் சந்திரிகாவின் பாதுகாப்பையும் உறுதி செய்தார்.
சந்திரிகாவுக்கும் அப்போதைய அமெரிக்க தூதர் பரிஷிட்டாவுக்கும் இடையிலான தகவல்களை தூது கொண்டு சென்றவர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்.
1994 ல் பொதுஜன முன்னணி ஆட்சிக்கு வந்து சந்திரிகா ஜனாதிபதியான பிறகு, விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கியது.
சமாதான பேச்சுவார்த்தை சீர்குலைந்த உடனே, புலிகள் கொழும்பின் பொருளாதார மையங்களை இலக்கு வைத்து குண்டு தாக்குதல்களை செய்யத் தொடங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் சேர்ந்தது.
கொழும்பு மத்திய வங்கி கட்டிடத்தின் மீது புலிகள் குண்டு வீசிய பின்னர் மத்திய வங்கியை மீள கட்டும் பொறுப்பை ஏற்க , ஒரு அமெரிக்க நிறுவனம் முன்வந்தது. இந்த நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவும் கிடைத்தது. எனினும், மத்திய வங்கியைக் கட்டுவதற்கான டெண்டரை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்க சந்திரிகாவின் அரசு மறுத்துவிட்டது.
சந்திரிகாவுக்கும் அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மெட்லின் ஒல்பிரைட்டுக்கும் இடையே தாக்குதல் கடித பரிமாற்றம் ஒன்று இக் காலத்தில் இடம்பெற்றது. ஆனால் சந்திரிகா, அமெரிக்காவுடனான நடவடிக்கைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பின்பற்றி வந்த வரலாற்று சுதந்திரத்தை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார்.
அந்த சுதந்திரம் அணிசேரா வெளியுறவுக் கொள்கையாக S.W.R.D பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்டிருந்தது. . அவருக்குப் பிறகு, திருமதி பண்டாரநாயக்க இந்தக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
1994 இல் சந்திரிகா ஆட்சிக்கு வந்தபோது, புதிய உலக ஒழுங்கின் கீழ் சோவியத் சோசலிச முகாம் சரிந்த சூழ்நிலையில் அவர் அமெரிக்காவுடன் நெருக்கமாகப் பழக வேண்டியிருந்தது, ஆனாலும் அவர் அமெரிக்காவின் தாளத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளவில்லை. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் அந்தக் கொள்கையையே பின்பற்றினார்.
பாதுகாப்புச் செயலாளராக கோட்டாபய , அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, அது அமெரிக்க குடிமகனுக்கும் , அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்றும் , அதைப் பற்றி எவரும் கவலைப்படத் தேவையில்லை என மகிந்த பகிரங்கமாக கூறினார். இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவை பாதுகாத்தது.
மகிந்தவுக்கு எதிராக சந்திரிகா , ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிய போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சந்திரகாவை கண்டு கொள்ளாது அலட்சியம் செய்தது. அவர் இப்போது சிஐஏவின் உளவாளி என அடையாளப்படுத்தியது.
1947 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, இடதுசாரிகள் , யூ.என்.பி.கட்சியை சி.ஐ.ஏ. என அழைக்கத் தொடங்கினர். 1951 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கிய பண்டாரநாயக்கவுக்கு பிறகு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் , ஐக்கிய தேசியக் கட்சியை சி.ஐ.ஏ. என முத்திரை குத்தியது.
மைத்திரிபால சிரிசேன 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கான பொது வேட்பாளராகவும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் இருந்த போதிலும், அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவரும் சி.ஐ.ஏ.வினது உளவாளி என அழைக்கப்பட்டார்.
எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய கொள்கை, அணிசேரா கொள்கை ஆகியவற்றைக் காப்பாற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகிந்தவைச் சுற்றி திரண்டது.
இறுதியில், மைத்திரிபால, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ஜெட்டி, அமெரிக்க மில்லினியம் ஒப்பந்தம் மற்றும் சோபா பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியன போன்ற தேசிய உடமைகளை விற்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிராகி அணிசேரா கொள்கையை காப்பாற்றும் நபராக இருப்பதாக ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிடம் வாக்குறுதியளித்தார்.
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மைத்திரியை நம்பவில்லை. அவர்கள் தங்கள் குடும்ப மூதாதையர்கள் பாதுகாத்த அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை பாதுகாக்க மஹிந்தவையே நம்பியிருந்தனர்.
ஆகஸ்ட் 3, 2018 அன்று, கொழும்பில் உள்ள லிப்டன் சுற்று வட்டத்தில் மஹிந்த ஜன பல கோஷா என்ற மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்தார்.
அந்த பேரணியில் மகிந்த கீழ் கண்டவாறு வாக்குறுதி அளித்தார்.
‘இலங்கை அரசால் விற்கப்படும் பொருட்களை வாங்காதீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விற்ற அனைத்தையும் திரும்பப் பெறுவோம். ‘
-மஹிந்த சர்வதேசத்திடம் சொல்கிறார்
04.08.2018 -லங்காதீபயின் செய்தி தலைப்பானது.
அதன்பிறகு, மகிந்தவுக்கு பதிலாக ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தல் மேடையில் இப்படி வாக்குறுதியளித்தார்.
‘தற்போதைய அரசாங்கத்தால் விற்கப்படும் அனைத்து வளங்களும் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்படும்’
கோட்டாபய ராஜபக்ச 22.10.2019 – திவயின
இந்த வாக்குறுதிகள் மற்றும் உத்தரவாதங்களை நம்பிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மக்கள் முன்னணியை நம்பியோர், ஜனாதிபதித் தேர்தலன்று காலையில் கோட்டாபயவுக்கு வாக்களித்தனர்.
ஆனால் இந்த வாக்காளர்களுக்கு தெரியாத ஒன்று இருந்தது. அதாவது, ராஜபக்சவுக்கும் அமெரிக்காவுக்கும் , இந்தியாவுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடுகள்,
கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்வதிலும், கோட்டாபய ஜனாதிபதியாக ஆவதற்கு இந்தியாவின் ஆசிகளைப் பெறுவதிலும். கெரவலப்பிட்டிய மின் நிலையம் அமெரிக்காவிற்கு தேவையான ஒரு ஒப்பந்தமாகும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ஜெட்டி இந்தியாவிற்கு தேவையான ஒரு ஒப்பந்தமாகும்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு ஜெட்டி இந்தியாவிடம் கொடுக்கப்படாமைக்கு காரணம், மஹிந்த உட்பட விமல், கம்மன்பில மற்றும் வாசுவின் கட்சிகள் இதற்கு எதிராக குரல் எழுப்பியதேயாகும்.
ஆனாலும் இந்தியாவுக்கு மேற்கு ஜெட்டி (துறைமுகம்) கிடைத்தது. கிழக்கு ஜெட்டி இன்னும் உள்ளது. கெரவலப்பிட்டிய மின் நிலையத்தை அமெரிக்கர்களுக்கு கொடுத்த விதத்தை கருத்தில் கொண்டு பார்த்தால், தேவைப்பட்டால் எதிர்காலத்தில் கிழக்கு துறைமுகத்தையும் ஒப்படைப்பது ஒரு சின்ன விடயமாகும் . கெரவலப்பிட்டிய கைமாறிய விதம் ஆரவாரமில்லாமல் நள்ளிரவில் நடந்த ஒப்பந்தமாகும்.
‘தேசபக்தர்கள் எங்கே?’
இப்படி கேட்போர் கோத்தபாயவுக்கு வாக்களித்த 69 லட்சத்தைத் தவிர வேறு யாரும் இல்லை. ரணிலின் அரசால் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ராஜபக்சயினர் கைப்பற்றும் வரை அவர்கள் காத்திருந்தனர்.
இன்று, கொழும்பு துறைமுகத்தின் மேற்கு ஜெட்டி, கெரவலப்பிட்டிய மின் நிலையம் மட்டுமல்ல, இலங்கையில் மிகவும் மதிப்பான கொழும்பு நிலங்களை வெளிநாட்டவர்களுக்கு ஏலத்தில் விற்க இன்றைய அரசு தயாராகி வருகிறது. இந்த அரசு அரசு சொத்துக்கள் மற்றும் நிலங்களை ஏலம் விடுகிறது. இன்று இலங்கை ஒரு ஏல வீடு. அவை:-
இலங்கை கண்காட்சி மாநாட்டு மையம்.
மக்கள் வங்கி, குயின்ஸ் கிளை
சதொச கிடங்கு வளாகம்
வெளியுறவு அமைச்சகம்
கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல்
கஃபூர் கட்டிடம்
யோர்க் கட்டிடம்
ஹில்டன் ஹோட்டல்
அஞ்சல் தலைமையகம்
மக்கள் வங்கி தலைமையகம்
சீநோர் கட்டிடம்
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு மைத்திரி – ரணில் அரசு குத்தகைக்கு கொடுத்தபோது, தற்போதைய காவல் துறை இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர புதுமையான ஒரு கருத்தை கூறினார்.
அவர் சொன்னது இதுதான்;-
“நாட்டை நேசிக்கும் மக்களாக, நாட்டின் வளங்களை விற்று, தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் நாட்டை ஒரு கோழை நாடாக மாற்றும் தற்போதைய அனைத்து ஆட்சியாளர்களையும் தண்டிக்க எங்கள் அரசாங்கத்தின் கீழ் பணியாற்றுவோம்.”
-சரத் வீரசேகர -அத தெரண -01.08.2017
இன்று சரத் வீரசேகர அமைச்சரவையில் இருக்கிறார். ஆச்சரியம் , கெரவலப்பிட்டியை அமெரிக்காவிற்கு விற்கும் திட்டம் வந்தபோது இந்த கதை அவரது நினைவுக்கு வரவில்லை என்பது புதுமையானது.
இந்த திட்டம் விவாதிக்கப்பட்ட போது மஹிந்த இத்தாலியில் இருந்தார்.
ஆனால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நல்லாட்சி அரசு , சீனாவுக்கு குத்தகைக்கு கொடுத்த போது வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் உள்ள வார்த்தைகளை மகிந்தவால் மறக்க முடியாது.
‘இலங்கை ஏலம்’
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தனியார்மயமாக்கப்பட்ட விதத்தால் ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியடைந்துள்ளது. தனியார்மயமாக்கல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு முன்பு இலங்கையின் மிக முக்கியமான மூலோபாய அரசு சொத்து குறித்து விவாதிக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு இருந்தபோதிலும், அவர்கள் அப்படி எதையும் அனுமதிக்கவில்லை. துறைமுகத்தின் மதிப்பை யார் மதிப்பிட்டார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இது தொடர்பான தொழில்நுட்ப மதிப்பீடு குறித்த அறிக்கையை யாரும் பார்க்கவில்லை. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான இரண்டு ஏலதாரர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளில் , துறைமுகத்தை பெற்ற நிறுவனம் எந்த அளவுகோலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை அரசு பொதுமக்களுக்கு விளக்கவில்லை. எங்களுக்கு கிடைத்த அனைத்து தகவல்களிலிருந்தும், அடுத்த ஏலம் இலங்கைக்கு மிகவும் சாதகமானது என்று தெரிகிறது.
2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிலங்கள் (உடைமைப் பரிமாற்றக் கட்டுப்பாடு) சட்டத்தை என் அரசாங்கம் இயற்றியதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும், வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் நிலம் வாங்குவதைத் தடைசெய்தது மற்றும் தற்போதைய அரசாங்கம் அந்த கட்டுப்பாடுகளை 2017 எண் 3 இலிருந்து நீக்கியது. . எனது அரசாங்கம் செய்தது புதிய விஷயங்களை உருவாக்குவதாகும். எனது அரசாங்கம் உருவாக்கியவற்றை விற்று பிழைப்பு நடத்துவதையே தற்போதைய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
எனது அரசாங்கம் தனியார்மயமாக்கல் மற்றும் வெளியாருக்கு விற்றல் என்பவற்றை கொள்கை ரீதியாக எதிர்த்தது மட்டுமல்லாமல், முந்தைய அரசுகளால் தனியார்மயமாக்கப்பட்ட சில நிறுவனங்களையும் திரும்பப் பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைய நிலையில் வேலை தொடர்ந்தால், இந்த அரசாங்கத்தின் இறுதிக்குள் இலங்கையில் சொத்து எதுவும் இருக்காது. இலங்கை முழுவதையும் வெளிநாட்டினருக்கு விற்கும் இந்த அரசின் திட்டத்திற்கு எதிராக ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு பணியிடத்திலும் மக்கள் ஒருங்கிணைய வேண்டும்.
‘மஹிந்த ராஜபக்ஷ – அத தெரண – 01.08.2017
‘மஹிந்த, நீங்கள் அன்று சொன்னது மைத்திரி-ரணில் அரசாங்கத்தைப் பற்றியா?’
நீங்கள் தற்போது பிரதமராக இருக்கும் , உங்கள் சகோதரரின் அரசாங்கம் பற்றியா?
- உபுல் ஜோசப் பெர்னாண்டோ (උපුල් ජෝශප් ප්රනාන්දුගේ ගුරුදා විග්රහය)
தமிழில் : ஜீவன்