இன்ஜமாம் உல்-ஹக் இதய பிரச்சினை காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதி.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான 51 வயது இன்ஜமாம் உல்-ஹக் இதய பிரச்சினை காரணமாக கடந்த 3 நாட்களாக அவதிப்பட்டார். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து அவர் நேற்று முன்தினம் மாலை லாகூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து டாக்டர்களின் ஆலோசனையின்படி அவருக்கு அவசரமாக ‘ஆஞ்சியோபிளாஸ்டி’ சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்தக்குழாயில் இருந்த அடைப்பு அகற்றப்பட்டது. தற்போது இன்ஜமாம் நல்ல நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்குரிய இன்ஜமாம் 1992-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் முக்கிய பங்கு வகித்தார். அவர் 120 டெஸ்ட், 378 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வு குழு தலைவராக இருந்து இருக்கும் அவர் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இன்ஜமாம் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவதாகவும், இந்த சூழலில் இருந்து அவர் வலிமைமிக்கவராக மீண்டு வருவார் என்று நம்புவதாகவும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.