மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணையலாம்! இராதாகிருஷ்ணன் எம்.பி. அழைப்பு.
“பல்வேறு காரணங்களால் மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியும்.”
இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் எனது தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன், மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் ஏ.லோரன்ஸ், மலையக தொழிலாளர் முன்னணியின் நிதிச் செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் உட்பட உயர்பீட உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார கொரோனா நிலைமை தொடர்பாகவும் அரசியல் நிலைமை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
முடக்க நிலை விடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் எங்களுடைய இளைஞர், யுவதிகள் மீண்டும் எவ்வாறு தங்களுடைய வேலைத்தளங்களுக்குச் செல்வது, அதன்போது அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தோட்டக் கம்பனிகளால் தொடர்ந்தும் பழிவாங்கப்பட்டு வருவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன் இதற்கு எவ்வாறு தீர்வைப் பெற்றுக்கொடுப்பது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போதே மலையக மக்கள் முன்னணியில் கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் வெளியில் சென்றவர்கள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து மீண்டும் கட்சியில் இணைந்து செயற்பட முடியும் என்பதை அனைத்து மத்திய குழு உறுப்பினர்களும் ஏகமனதாகத் தீர்மானித்ததுடன் அவ்வாறான ஒரு நிலையில் கட்சி எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக கட்சியின் கொள்கையுடன் இணைந்து செயற்பட விரும்புகின்றவர்கள் இதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவுடன் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்” – என்றார்.