கொரோனா கட்டுக்குள் வரும்வரை எந்தத் தேர்தலும் வேண்டாம்! – ரணில் வலியுறுத்து.
“இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக கட்டுக்குள் வரும்வரை எந்தவொரு தேர்தலும் நடத்தப்படக்கூடாது.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போதைய அரசு பதவி விலகி, மக்கள் ஆணையை பெறுவதற்காக தேர்தலொன்று நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் முன்வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனா வைரஸ் பரவல் உள்ள சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவது பொருத்தமா என சிந்திக்க வேண்டும்.
கொரோனாவுக்கு மத்தியில் கனடா பிரதமர் தேர்தலுக்குச் சென்றார். அவர் சிறப்பாக பொருளாதாரத்தை நெறிப்படுத்தினார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தினார். இதனால் பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் தேர்தலுக்குச் சென்றார். ஆனால், பெரும்பான்மைப் பலம் கிடைக்கவில்லை.
கொரோனாவுக்கு மத்தியில் தேர்தல் நடைபெறுவதற்கு அந்த நாட்டு மக்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
எனவே, இலங்கையில் கொரோனா முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. மீண்டுமொரு சுற்று வரலாம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கும், பொருளாதாரத்தை மீட்பதற்குமே நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்விரு விடயங்களையும் சீர்செய்த பின்னர் தேர்தலுக்குச் செல்லலாம்” – என்றார்.