குடிபோதையில் சாரதியைத் தாக்கி ரவுடிகள் வெறியாட்டம்! பணமும் கொள்ளை.

நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியில் உள்ள டியன்சின் நகரில் வைத்து, குடிபோதையில் இளைஞர்கள் சிலர் சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், அவரது பையிலிருந்த 70 ஆயிரம் ரூபா பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த 27 வயதுடைய சாரதி பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தோட்டப்புறங்களில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குப் பொருள்களை விநியோகிக்கச் சென்ற சாரதி மீதே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சாரதி சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொகவந்தலாவைப் பொலிஸார், சம்பந்தபட்ட இளைஞர்களைக் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய இளைஞர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் உள்ளன எனவும், டியன்சின் நகரில் இவர்கள் ரவுடிகளைப் போல் நடந்துகொண்டனர் எனவும் பாதிக்கப்பட்ட பலர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.