அரசின் வினைத்திறனற்ற செயல்களால் பாரிய பொருளாதார நெருக்கடியில் நாடு ஐ.தே.க. பகிரங்க குற்றச்சாட்டு.
“இலங்கையின் தற்போதைய அரசு சர்வதேச ரீதியாக நாட்டைச் சரியாகக் கையாளாத காரணத்தால் தற்போது அதிகளவான தொழிற்சாலைகள் மூடப்படும் நிலைமைக்கு வந்துள்ளன. நாடு வரலாறு காணாத பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றது.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு முன்னெடுத்து வரும் வினைத்திறனற்ற செயற்பாடுகள் காரணமாக நாடு மீண்டும் வரிசையில் நிற்கும் யுகத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் நாடு பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடி நிலைமைக்கு உள்ளாகி மக்கள் கடும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.
வரலாற்றில் வினைதிறனற்ற, பலவீனமான அரசுகள் ஆட்சியில் இருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாடு பொருளாதார ரீதியாக அழிவைச் சந்தித்தது. அப்படியான அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சியே நாட்டை மீண்டும் கட்டியெழுப்பியது” – என்றார்.