பகலில் பள்ளியில் ஆசிரியர் பணி; இரவில் மயானத்தில் பிணம் எரியூட்டும் பட்டதாரி இளைஞர்!
பகலில் பள்ளியில் ஓவிய ஆசிரியர் பணி செய்யும் பட்டதாரி இளஞர் ஒருவர் இரவில் மயானத்தில் பிணம் எரிக்கும் வேலையை செய்துவருகின்றார். தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கிருஷ்ணாராஜபுரம் காலனியை சேர்ந்தவர்கள் கருத்தகாளை, பஞ்சவர்ணம் தம்பதியர்.
இவர்கள் இருவரும் மானாமதுரை மயானத்தில் பிணம் எரிக்கும் பணி செய்து தனது வாழ்க்கையை நடத்திவருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ள நிலையில் கடைசி மகன் சங்கர் சிவகங்கை அரசு கலைக்கல்லூரியில் எம்.எஸ்.சி வேதியியல் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் மட்டுமே அவர்களின் குடும்பத்தில் முதல்பட்டதாரி ஆவார். சங்கர் தனது குடும்ப வறுமை காரணமாக சிறுவயது முதலே பள்ளிக்கு செல்வதுடன் மாலை தனது தந்தை தாயிக்கு உதவியாக பிணம் எரிக்கும் பணியில் ஈடுபடுவது வழக்கம். சங்கருக்கு கலை மீது ஆர்வம் அதிகம் காரணமாக ஓவியம் வரைவதிலும் சிறந்துவிளங்கினார்.
இந்தநிலையில் அவருக்கு திருமணமானதுடன் வேலை வாய்ப்பும் கிடைக்காததால் தனக்கு தெரிந்த ஓவியத்திறமையை கொண்டு தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்தை கொண்டு நடத்த அந்த வருமானமும் போதுமானதாக இல்லாததால் இன்றளவும் மயானத்தில் பிணம் எரிக்கும் பணியில் அவர் தன்னுடைய தந்தைக்கு துணையாக செல்கிறார்.
இந்தநிலையில் தனக்கு அரசு உதவ முன்வந்தால் பேரூதவியாக இருக்கும் என்றும் ஏதேனும் வேலை வாய்ப்பு வழங்கினால் தன்னுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும் எனவும் சங்கர் கோரிக்கையும் விடுத்துள்ளார்.
சங்கரின் ஓவிய திறமையை பார்த்து தனியார் அமைப்புகள் பல பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாலும் அரசு இந்த திறமையான அங்கிகரிக்க முன் வர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.