பெங்களூரில் ஒரே பள்ளியில் படித்து வந்த 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!
ஒரே பள்ளியில் படித்து வந்த 60 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால், வரும் அக்டோபர் 20ம் தேதி வரை பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சில வாரங்களுக்கு முன்னர் 6ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தலைநகர் பெங்களூருவில் உள்ள சைதன்யா உண்டு உறைவிட பள்ளியில் சுமார் 500 மாணவர்கள் அங்கேயே தங்கி படித்து வருகின்றனர். இவர்கள் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டதால் பள்ளிக்கு திரும்பி பாடங்கள் படித்து வந்த நிலையில் மேற்கண்ட பள்ளி மாணவர் ஒருவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது, அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 105 பேருக்கு ரேபிட் ஆண்டிஜன் சோதனையும், 424 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையும் நடத்தப்பட்டது. இந்த பரிசோதனைகளின் முடிவில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு மாணவர்களுக்கு அறிகுறிகள் இருந்துள்ளன.
இந்நிலையில் கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு அக்டோபர் 20ம் தேதி வரை பள்ளி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு மாவட்ட ஆட்சியர் ஜே.மஞ்சுநாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, அறிகுறிகளுடன் கூடிய மாணவர்கள் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அறிகுறிகள் இல்லாத மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தனியாக தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு கருதி பள்ளி மூடப்பட்டிருப்பதாகவும் கூறினார். மேலும் இது குறித்து பெற்றோர் யாரும் கவலைப்படத்தேவையில்லை, மாணவர்கள் இங்கு ஒரு மாதமாக தங்கியிருந்துள்ளனர். இவர்கள் பள்ளிக்கு வந்த போது யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை. எங்கள் குழு அங்கு உள்ளது, அவர்கள் மாணவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்வார்கள் என கூறினார்.
7 நாட்களுக்கு பின் மீண்டும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 14 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள், மீதம் இருப்பவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள்..