பாதகமான ஒப்பந்தங்களில் நான் கைச்சாத்திடமாட்டேன்! -கம்மன்பில திட்டவட்டம்.
“யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் 40 வீதத்தை வழங்குவதன்றி, இலங்கைக்கு ஐந்து வருடத்துக்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதே பிரச்சினைக்குரியது. நாட்டுக்குப் பாதகமான எந்தவொரு உடன்படிக்கையிலும் வலுசக்தி அமைச்சர் என்ற வகையில் நான் கையொப்பமிடப்போவதில்லை.”
இவ்வாறு வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நியூ போட்ரஸ் வலு நிறுவனம் 2023ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரை ஐந்து வருடங்களுக்கே எரிவாயு விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது.
இந்த வருட இறுதியில் ஏலம் நடத்தப்பட்டால் அதிலிருந்து மூன்று வருடங்களில் எமது நாட்டில் எரிவாயு உற்பத்தியை ஆரம்பிக்க முடியும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
உற்பத்தியை ஆரம்பிக்க முடியும். எனினும், எமது மின்சார உற்பத்தி நிலையத்துக்கு 2028 ஆம் ஆண்டு வரை அமெரிக்க நிறுவனம் எரிவாயுவை வழங்குமானால் இலங்கையில் எரிவாயுவை அகழ்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைப்பதற்கு அது தடையாக அமையலாம்.
அது தொடர்பில் பேச்சு நடத்தப்பட்ட அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் வலுசக்தி அமைச்சுக்கு அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பில் நாம் எழுத்து மூலம் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளோம்.
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீதத்தை வழங்குவதன்றி, இலங்கைக்கு ஐந்து வருடங்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் சர்வாதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதே பிரச்சினைக்குரியது.
அத்துடன் டென்டர் செயற்பாடுகள் நடைமுறையில் உள்ள நிலையில் எரிவாயு விடயம் தொடர்பில் அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சிலேயே உள்ளனர். எனினும், உடன்படிக்கை மேற்கொள்ளும் எந்தக் குழுவிலும் எமது அமைச்சின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை.
அனுபவம் உள்ளவர்கள் எமது அமைச்சில் உள்ள நிலையில் அது தொடர்பில் அமைச்சரவைக்கு 2 மதிப்பீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. மற்றுமொரு மதிப்பீடும் பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும், எரிவாயு உடன்படிக்கை எந்தளவு காலம் பேசப்பட்டது என எனக்குத் தெரியாது.
எவ்வாறெனினும் எமது நாட்டுக்குப் பாதிப்பான எந்தவொரு உடன்படிக்கையிலும் நான் கையொப்பமிடமாட்டேன்” – என்றார்.