முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லை.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாதநிலை காரணமாக நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ள தாகவும் இதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில் :
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாததால் விபத்துக்குள்ளாவோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். கடந்த ஒரு மாதகாலமாக இந்த நிலை காணப்படுகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்திற்குஉரிய மாவட்ட மருத்துவமனையாக இது காணப்படுகின்றது. பரந்த பிரதேசத்தினை உள்ளடக்கிய மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனையினை நம்பியே பல நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
வைத்தியர்கள் பற்றாக்குறை, நிரந்தர பணிப்பாளர் இல்லாத பற்றாக்குறை என்று காலம் காலமாக பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன.
இதற்காக மக்கள், மக்கள் பிரதிநிதிகள் உரிய அதிகாரிகளை அணுகி போராட்டங்கள் செய்து உண்ணாவிரதங்கள் இருந்துதான் பெறவேண்டிய துப்பாக்கிய நிலையில் இருக்கின்றோம்.
அண்மைக்காலமாக மருத்துவமனைக்கு சத்திரசிகிச்சை நிபுணர் இல்லை என்று மக்கள் முறைப்பாடு செய்கின்றார்கள்.
நாளாந்தம் விபத்துக்கள் பதிவாகிவரும் நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சத்திரசிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினால் வெளி மாவட்டங்களுக்கு மாற்றம் செய்யவேண்டிய நிலை தொடர்ந்து கொண்டு வருகின்றது. இதனால் நோயாளர்ள் பாதிக்கப்படுகின்றார்கள்.
எனவே சுகாதார துறையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் நிர்வாகரீதியில் இருக்கின்ற உயர் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் இருக்கின்ற உண்மைத்தன்மையினை சரியான முறையில் கவனத்தில் கொண்டு சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ச்சியாக இங்கு நியமிக்கின்றவர்களை ஒருமாதம், இரண்டுமாதம், ஒருவருடம் என்று நியமிக்காது ஒரு நிரந்தர நியமனமாக இனிவரும் காலப்பகுதியிலாவது அமையப்பெற உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இதுவரை காலமும் கடமையாற்றிய சத்திரசிகிச்சை மருத்துவர் உயர்கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.