மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுதியில் 53 சதவீத வாக்குப்பதிவு.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதம் நடந்த மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
6 மாதங்களுக்குள் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்பதால், மம்தா போட்டியிட வசதியாக அவரது சொந்த தொகுதியான பவானிபூரில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, பவானிபூர் மற்றும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட சாம்சர்கஞ்ச், ஜங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார்.
அந்த தொகுதியில் வாக்காளராக இருப்பதால், மித்ரா பள்ளியில் மம்தா வாக்களித்தார். வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பெரும்பாலும் அமைதியாக நடந்தபோதிலும், ஆங்காங்கே திரிணாமுல் காங்கிரஸ்-பா.ஜனதா கட்சியினர் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்தனர்.
மந்திரிகள் பிர்ஹாத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி ஆகியோர் வாக்காளர்களிடம் ஓட்டு கேட்பதாக பா.ஜனதா வேட்பாளர் பிரியங்கா திப்ரிவால் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் அளித்தது. ஆனால், தாங்கள் டீக்கடையில் டீ குடிக்க சென்றதாக பிர்ஹாத் ஹக்கிம் விளக்கம் அளித்தார்.
பா.ஜனதா வேட்பாளர், 20 கார்களுடன் சென்று வாக்காளர்களை அச்சுறுத்துவதாக திரிணாமுல் காங்கிரஸ் புகார் கொடுத்தது. ஒரு வாக்குச்சாவடியில் கள்ள வாக்காளர்களை திரிணாமுல் காங்கிரசார் வரவழைத்ததாக பா.ஜனதா குற்றம் சாட்டியதால், இரு கட்சியினருக்கிடையே கைகலப்பு நடந்தது.
வாக்குச்சாவடிகளுக்குள் தங்கள் கட்சி முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று பா.ஜனதா தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த சம்பவங்களை தவிர, பவானிபூரில் பெரும்பாலும் அமைதியாக ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. 53.32 சதவீத ஓட்டுப்பதிவு நடந்தது. சாம்சர்கஞ்ச் தொகுதியில் 78.60 சதவீத வாக்குகளும், ஜங்கிபூர் தொகுதியில் 76.12 சதவீத வாக்குகளும் பதிவாகின.