தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில்போய் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபர் கைது!
தமிழகத்தின் ஆம்பூரில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்தில் போய் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபரை புதுச்சேரி போலீசார் கைது செய்தனர். பகலில் மதுபானக் கடைகளின் வாசலிலேயே குடித்துவிட்டு படுத்துவிடும் அவர், நள்ளிரவு நேரத்தில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை தேவகி நகரை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர் தனது வீட்டின் மதில் மீது மர்ம நபர்கள் சிலர் ஏற முயற்சிப்பதாக லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று மதில் மேல் ஏற முயற்சித்த ஒருவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் ஆம்பூரை சேர்ந்த இஸ்மாயில் (45) என்பதும் இவர் புதுச்சேரி லாஸ்பேட்டை, கோரிமேடு ஆகிய இடங்களில் உள்ள ஐந்து வீடுகளில் திருடியுள்ளதும் தெரியவந்தது. இஸ்மாயில் மீது ஆம்பூர், வேலூர் பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட வீடு புகுந்து திருடிய வழக்குகள் நிலுவையில் உள்ளன. இஸ்மாயிலுடன் திருட வந்த ஒருவர் தப்பியோடியுள்ளார் .அவரும் விரைவில் பிடிப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர், ஆம்பூரில் கைவரிசை காட்டி சிக்கிய இஸ்மாயில் புதுச்சேரிக்கு தனது திருட்டு தொழிலை இடமாற்றினார். தினமும் ஆம்பூரில் இருந்து பேருந்தில் வரும் அவர் இங்குள்ள சாராயக்கடையில் குடித்து விட்டு பகலில் பூட்டி இருக்கும் வீட்டினை நோட்டமிட்டுள்ளார்.பின் சாராயக்கடை வெளியே தூங்கி விட்டு நள்ளிரவு திட்டமிட்ட வீட்டை உடைத்து திருடிய பொருட்களுடன் பேருந்தில் மீண்டும் ஆம்பூர் சென்றுவிடுவார்.
இதே முறையில் 5 வீடுகளில் 42 சவரன் தங்க நகைகள் மற்றும் 30 ஆயிரம் பணத்தை திருடியுள்ளார். அனைத்தையும் பறிமுதல் செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். ஒரு இடத்தில் கூட கைரேகை பதியாமல் தனது திருட்டை நடத்தி வந்த இஸ்மாயில் பொது மக்கள் ஒருவரின் துப்பால் சிக்கி கொண்டுள்ளார்.பொது மக்கள் ஒவ்வொரும் இப்படி தங்களது கடமை உணர்ந்து காவல்துறையுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என காவல் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் கேட்டு கொண்டார்…