அவசரகாலச் சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்! – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.
“ஊரடங்குச் சட்டத்தை ஏற்கனவே நகைச்சுவையாக்கிய அரசு, தற்போது அவசரகாலச் சட்டத்தையும் நகைச்சுவையாக்கியுள்ளது. நெருக்கடியான கட்டங்களிலேயே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும். ஆனால், ஒடுக்குமுறைக்காகவே இந்த சட்டத்தை தற்போதைய அரசு கொண்டுவந்தது. அது உடன் நீக்கப்பட வேண்டும்.”
இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறியதாவது:-
“அரிசி மற்றும் நெல் வகைகளுக்கு விலையை நிர்ணயித்து 5 வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டன. அதுமட்டுமல்ல தரவுகளைச் சேகரிப்பதற்கு பிரிகேடியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். விலையை நிர்ணயிப்பதற்கு மேஜர் ஜெனரல் ஒருவர் நியமிக்கப்பட்டார். ஆனாலும், உரிய தீர்வு கிட்டவில்லை. மேற்படி அதிகாரங்கள் போதாதென அவசரகாலச் சட்டமும் கொண்டுவரப்பட்டது.
ஆனால், இன்று என்ன நடக்கின்றது? அரிசி வகைகளின் விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் நிர்ணயிக்கின்றனர். அரசு வேடிக்கை பார்க்கின்றது. அதாவது நகைச்சுவைத்தனமான அரசாக இது மாறியுள்ளது” – என்றார்.