மூழ்கப்போகும் கப்பலில் ஏறமாட்டோம்! ம.ம.மு. தலைவர் ராதாவின் அழைப்பு நிராகரிப்பு.
மலையக மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறியவர்கள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பியால் விடுக்கப்பட்ட அழைப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
“மலையக மக்கள் முன்னணியானது, கொள்கைமாறி பயணிப்பதால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ளது. முற்போக்கு கூட்டணியில் அங்கம்வகிப்பதால்தான் ஓரளவேனும் தாக்குபிடித்து நின்கின்றது. தனிவழி என்பது இனி சாத்தியப்படாது. எனவே, மூழ்கப்போகும் கப்பலில் யார்தான் ஏறுவது?” எனச் சுட்டிக்காட்டி பெரும்பாலான உறுப்பினர்கள் அழைப்பை நிராகரித்துள்ளனர் என்று ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், கட்சியிலிருந்து வெளியேறியிருந்த ஒரு சில உறுப்பினர்கள் மீண்டும் கட்சியுடன் சங்கமிக்கவுள்ளனர் எனவும், இதற்குத் தலைமைப்பீடமும் பச்சைக்கொடி காட்டியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தவொரு சிலருக்காகவே முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன் திடீர் அழைப்பை விடுத்துள்ளார் எனவும், முன்னணியின் செயற்பாடுகளால் அதிருப்தியில் வெளியேறியவர்கள், இராதாகிருஷ்ணனின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்து செயற்படத் தயாரில்லை எனவும் தமக்கு நெருக்கமானவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.