கேரளாவில் கல்லூரி வளாகத்தில் வைத்து காதலியின் கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் – போலீசார் வரும் வரை அந்த இடத்திலே நிதானமாக காத்திருந்து கைதானார்!
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள சென்ட் தாமஸ் கல்லூரியில் உணவு தொழில்நுட்ப படிப்பு படித்து வந்தவர் மாணவி நிதினா மோல் (22), இவரும் அதே வகுப்பை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவரும் காதலித்து வந்துள்ளனர். சமீப நாட்களாக இவர்கள் காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று தேர்வு எழுதுவதற்காக நிதினா மோல், கல்லூரி வருகை தந்துள்ளார். அவரிடம் இன்று காலை 11.30 மணி அளவில் அபிஷேக் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அவர்களிடையே, கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த அபிஷேக் தான் கையில் வைத்திருந்த பேப்பர் கத்தியை கொண்டு மாணவி நிதினா மோல் கழுத்தை அறுத்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, இந்த கொலை சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, மாணவியை கழுத்தறுத்த கொலை செய்த அபிஷேக், சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்செல்லாமல், போலீசார் வரும் வரை அந்த இடத்திலே நிதானமாக அமர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் அபிஷேக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.