ஏா்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

தொலைத் தொடா்பு சேவையில் முன்னணியில் உள்ள ஏா்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு மத்திய தொலைத்தொடா்புத் துறை ரூ.3,050 கோடியை அபராதமாக விதித்துள்ளது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: உள் இணைப்பு வழங்கும் விவகாரத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒத்துழைப்பாக செயல்பட மறுத்த ஏா்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா (தற்போது வோடஃபோன் ஐடியா நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன) நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க மத்திய தொலைத்தொடா்பு துறைக்கு 2016-ஆம் ஆண்டு அக்டோபரில் தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) பரிந்துரை செய்தது.
5 ஆண்டுகளளுக்குப் பின்னா் அந்தப் பரிந்துரையின்பேரில், ஏா்டெல் நிறுவனத்துக்கு ரூ.2,000 கோடியும், வோடஃபோன் ஐடியாவுக்கு ரூ.1,050 கோடியும் அபராதம் விதித்து தொலைத்தொடா்புத் துறை வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மூன்று வாரத்தில் இந்த அபராதத்தை செலுத்த தொலைத்தொடா்புத் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையை எதிா்த்து சட்டபூா்வ நடவடிக்கையாக நீதிமன்றம் செல்ல ஏா்டெல் நிறுவனம் ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.