காந்தி ஜெயந்தியன்று , முகாம்களில் உள்ள இலங்கை தமிழரின் குடியுரிமை கோரிக்கை
அக்-2 ம் தேதி (இன்று )காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இந்திய குடியுரிமை கோரிக்கையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் நலத்திட்டங்களை அறிவித்த தமிழக அரசிற்கும் , முதலமைச்சருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டதோடு,
இந்திய விடுதலைக்கு வித்திட்ட , அண்ணல் மகாத்மாகாந்தி அவர்கள் பிறந்த தினமான காந்தி ஜெயந்தி நாளில் , முகாம் வாழ்விலிருந்து விடுபட்டு , இந்திய குடியுரிமை பெற்ற மக்களாக வாழ்ந்திட விரும்பும் நாம் எடுத்துக்கொள்ளும் உறுதிமொழி , உறவுகளையும் உடமைகளையும் இழந்து திக்கற்று வந்த எங்களை ஆதரித்து நின்ற , இந்திய தேசத்திற்கும், தமிழ் நாட்டு மக்களுக்கும் நன்றி கூறுகிறோம்.
மத்திய மாநில அரசுகளின் அரவணைப்பிற்கும் , நலத்திட்ட உதவிகளுக்கும் நன்றி கூறுகிறோம். இந்திய மண்ணில் கால் பதித்தது முதல் இன்று வரை முப்பது வருடங்கள் கடந்தும் , எங்கள் வாழ்க்கை முன்னேறவில்லை. ஆகையால், எல்லோரையும் போல நலமுடன் நாங்களும் உரிமைகளோடு வாழ, குடியுரிமை அவசியமாகிறது .
இந்திய அரசியலமைப்பு உறுப்பு 21ல் வழங்கியிருக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமையின்படி , முப்பது வருடங்களுக்கு மேலாக முகாமில் வசிக்கும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகளை வேண்டுகிறோம். எங்களது இளம் தலைமுறை , தனக்கான அடையாளமின்றி , கல்வியிலும் , வேலைவாய்ப்பிலும் பின்தங்கியுள்ளனர் .
ஆதலால் எங்கள் வாழ்வு ஒளிபெற சமத்துவ மனிதனாக , சுய மரியாதையுடன் வாழ மத்திய மாநில அரசுகள், எங்கள் கோரிக்கையை ஏற்று, எங்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கான முழுமையான ஏற்பாடு நடக்கும் வரை, தொடர்ந்து முழு முயற்சியுடன் காந்திய வழியில் அகிம்சை முறையில் செயற்படுவோம் என, அண்ணல் காந்தி பிறந்த நாளில் உறுதி ஏற்கிறோம் என உறுதிமொழியும் வாசிக்கப்பட்டது.
இதில் முகாம் மக்கள் மற்றும் ஒரு சில முகாம்களில் ஊர் தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.