மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.
கந்தளாய் வான் எல விகாரகல கிராமத்தில் மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று( 02) திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமாகிய கபில அத்துகோரல தலைமையில் விகாரகல விகாரையில் நடைபெற்றது .
நீண்டகாலமாக தாம் பயிர் செய்துவந்த இடங்களில் பயிர் செய்கையை மேற்கொள்ள முற்படுகின்ற சந்தர்ப்பத்தில் சில அரச நிறுவனங்கள் மூலம் தமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவதால் தாம் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக இதன்போது விவசாயிகள் தெரிவித்ததுடன் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இதன்போது உரிய அதிகாரிகளிடம் வேண்டிக்கொண்டனர்.
மக்களது உண்மையான பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு சாதகமான தீர்வுகளை வழங்க முடியுமா என்பதனை ஆராய்ந்து சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் முற்படுவதாகவும் பிரதேச மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. பயிர்செய்கை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு பிரதேசத்திலும் பயிர்ச்செய்கையை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய உணவுற்பத்தி இறக்குமதியை தவிர்த்துக் கொள்ள முடியும்.
இதனடிப்படையில் மாவட்டத்தில் பயிர் செய்ய முடியுமான இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவை பொருத்தமான முறையில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு பயிர்ச்செய்கை செய்வதற்கான ஏற்பாடுகள் உரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இப்பிரதேசத்தின் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஒரு குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அவை தொடர்பான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு கிரமமான முறையில் அவற்றுக்கு எவ்வாறு தீர்வுகளை வழங்க முடியும் என்பது தொடர்பில் ஆராயப்படும் என்றும் இதன் போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச செயலாளர் உபேக்சா குமாரி, திணைக்கள தலைவர்கள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.