எட்டுவகை லட்சுமியின் அருள் கிடைக்க அனுஷ்டிக்க வேண்டிய விரதம்.
சித்திரை மாதம் சுக்கிலபட்சத்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உமாதேவியாரை வணங்கி மனம் உருகி இருக்கும் விரதம் வெள்ளிக்கிழமை விரதம் எனப்படும். அரக்கர்களால் அவதிப்பட்ட தேவர்கள் அம்பாளை நோக்கி தொழுது வேண்டினர். அப்போது அம்பாள் அவர்களுக்கு அபயம் அளித்து அரக்கர்களை வதம் செய்தாள். தேவர்களையும், முனிவர்களையும் காத்து ரட்சித்தாள். இதை முன்னிட்டே அம்பாளை தொழும் வெள்ளிக்கிழமை விரதம் இருக்கும் வழக்கம் ஏற்பட்டது.
தனம், தான்யம் என்ற அஷ்ட ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மகாலட்சுமி அஷ்டலட்சுமியாக விளங்குகிறாள். வித்யாலட்சுமி, தனலட்சுமி, சந்தானலட்சுமி, தைரியலட்சுமி, மோட்சலட்சுமி, வீரியலட்சுமி, ஜெயலட்சுமி, சௌபாக்கிய லட்சுமி என்று அஷ்டலட்சுமிகள் அழைக்கப்படுகிறார்கள்.
எட்டுவகை லட்சுமியின் அருளும் இருந்தால், நமக்கு ஏராளமான செல்வங்கள் வந்து சேரும். சகல சித்தியும் தரும் ஆதிலட்சுமி, சிறப்புகள் வழங்கும் சந்தான லட்சுமி, அரச போகம் தரும் கஜ லட்சுமி, செல்வம் தரும் தன லட்சுமி, பசி தீர்க்க உணவளிக்கும் தான்ய லட்சுமி, கவலையைப் போக்கும் மகாலட்சுமி, வெற்றியைத் தரும் விஜய லட்சுமி, வீரம் கொடுக்கும் வீர லட்சுமி ஆகிய எட்டு வகை லட்சுமிகளையும் விரதமிருந்து வெள்ளிக்கிழமை தோறும் விளக்கேற்றி வைத்து வருகைப்பதிகம் பாடவேண்டும்.
தன லட்சுமியின் அருளைப் பெற வேண்டுமானால், வசதி இல்லாதவர்களுக்கு பொருளுதவி செய்ய வேண்டும். தான்ய லட்சுமியின் அருளைப் பெற, பசியோடு வருபவர்களுக்கு உணவளிக்க வேண்டும்.
வித்யா லட்சுமியின் அருள் கிடைக்க, படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு புத்தகம், பேனா வாங்கிக் கொடுக்க வேண்டும். இதுபோல அந்தந்த லட்சுமிக்கு விரத வழிபாடுகளையும், அவை மகிழ்ச்சியடையும் விதத்தில் செயல்பாடுகளையும் செய்தால் செல்வச் செழிப்புடன் வாழலாம்.