திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ராஜா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனான வீரபாண்டி ஆ.ராஜா என்கிற ராஜேந்திரன், திமுக தேர்தல் பணிக்குழு மாநில செயலாளராக இருந்து வந்தார். சேலம் மாவட்டம் பூலாவரியில் உள்ள தனது இல்லத்தில் 58-வது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். பிறந்தநாளையொட்டி காலை தந்தை ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்த நிலையில் தொண்டர்களை சந்திக்க அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 2006 முதல் 2011ம் ஆண்டு வரை வீரபாண்டி சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
வீரபாண்டி ராஜாவின் உடல் சேலம் பூலாவரியில் அவரின் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். வீரபாண்டி ராஜாவின் இழப்பு தனிமனித மறைவு அல்ல என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.
வீரபாண்டி ராஜா மறைவு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டரில், சேலத்துச் சிங்கம் வீரபாண்டியாரின் மகனும் எனது அன்புச் சகோதரருமான இராஜா மறைந்தார் என்றறிந்து துடித்துப் போனேன். அவரது குடும்பத்தினருக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் ஆறுதல் சொல்ல சொற்கள் இன்றி தவிக்கிறேன். கழக வரலாற்றில் வீரபாண்டியாரைப் போல் இராஜாவும் நிலைத்து நிற்பார்! என்று பதிவிட்டுள்ளார்.
வீரபாண்டி ராஜாவின் பிறந்தநாளன்று ஏற்பட்டிருந்த மகிழ்ச்சியும், உற்சாகமும் ஒரு சில மணி நேரங்களில் சோகமாக மாறியிருப்பது வருத்தம் அளிப்பதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.