அரசுக்குள் இருக்கும் சதிகாரர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
“அரசு முன்னெடுத்து வரும் மக்கள் சார்பான ஆட்சியைச் சீர்குலைக்கும் சூழ்ச்சியாளர்கள் அரசுக்குள்ளேயே இருக்கின்றனர். இந்தச் சதிகாரர்களை அரசிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்.”
இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க வலியுறுத்தினார்.
இவர்கள் அரசுக்குள் இருந்துகொண்டு அரசையே விமர்சித்து வருகின்றனர் எனவும், இது எந்த வகையிலும் பொருத்தமற்ற செயல் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அரசு மக்கள் வழங்கிய மூன்றிலிரண்டு பெரும்பான்மைப்பலத்துக்கமைய செயற்பட்டு வருகின்றது. அதனைச் சீர்குலைக்க அரசில் அங்கம் வகிக்கும் எவராலும் முடியாது.
சில அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களை வெளியில் வந்து விமர்சிக்கின்றனர்.
இப்படியான நபர்கள் குறித்து மிகத் துரிதமாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்.
தொடர்ந்தும் இந்தச் சூழ்ச்சியாளர்கள் அரசுக்குள் இருந்தால், அது அரசின் பயணத்துக்குத் தடையாக இருக்கும். எனவே, இந்தச் சதிகாரர்களை அரசிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும்” – என்றார்.