துர்கா தேவி அவதரித்த ‘மகாளய’ நாள்: பிரதமர் மோடி வாழ்த்து
துர்கா தேவி அவதரித்த நாளான மகாளய நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கம், ஒடிசா, திரிபுரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் ‘மகாளய’ தினத்தன்று துர்கா தேவி வழிபாடு நடக்கிறது. மகிஷாசுரனை அழிப்பதற்காக சிவன், பிரம்மா, விஷ்ணு மூவரும் துர்கா தேவியை புவியில் அவதரிக்க வைத்த நாள் ‘மகாளய’ தினம் என்று நம்பப்படுகிறது. இந்நாளில் வட மாநிங்களில் துர்கா பூஜை நடைபெறுகிறது.
இதையடுத்து, மகாளய நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இந்த மகாளய தினத்தன்று உலகப் பெருந்தொற்றை வீழ்த்துவதற்கான வலிமையை வேண்டி துர்க்கை அன்னையை வணங்குவோம். துர்க்கை அன்னையின் ஆசீர்வாதங்கள் அனைவரின் வாழ்விலும் நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தரட்டும். நமது புவி வளம் பெறட்டும். சுபமான மகாளயம்!’ என்று பதிவிட்டுள்ளார்.
நாளை முதல் நவராத்திரி பூஜை தொடங்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை ‘மகாளய அமாவாசை’ எனப்படுகிறது. இந்நாளில் முன்னோர்களின் ஆசியைப் பெற அவர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நடைமுறை உள்ளது.