எல்லைக் கிராமங்களை பாதுகாக்க ஒத்துழைப்புக்கோரும் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் பனை விதைகள் நடுகை செய்யவுள்ள செயற்றிட்டத்திற்கு மாவட்ட மக்களிடம் ஒத்துழைப்பைப் கோருவதாக இன்று மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடக மன்றத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் சமுக நலன் பிரிவின் உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இதன்போது அவர்கள் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கின்ற பனை விதைகள் நடும் செயற்றிட்டத்தினை எமது மக்களுக்கு தெரியப்படுத்துவதன் ஊடாக எமது மக்களின் உதவிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்.
அதேவேளை தமிழ் இளையோர் மக்கள் இயக்கமானது சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளை வடகிழக்கு,
மலையக பரப்புக்களில் பரவலாக செய்துவருகின்றது. இதன் ஒருபகுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் மற்றும் மாவட்டத்தின் மண்ணரிப்பு ஏற்படக்கூடிய இடங்களை மையப்படுத்தி பனை விதைகளை மாவட்டம் முழுமைக்கும் நடுகை செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
இதற்கான அனுமதிகள் மாவட்ட அரசாங்க அதிபரிடம் இருந்தும், பனை அபிவிருத்தி அதிகார சபையிடமும் இருக்கு பெற்றிருக்கின்றோம். இந்த பனை விதைகள் நடுகை திட்டத்தினை செயற்படுத்துவதன் ஊடாக, மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களை அழகுபடுத்தலாம், எல்லைக் கிராமங்களில் இருந்துவருகின்ற அத்துமீறிய காட்டு யானைகளின் ஊடுருவலை தணிக்கலாம், பனை சார்ந்த கைத்தொழில்களை ஊக்குவிக்கலாம், மண்ணரிப்பிற்குள்ளாகக் கூடிய இடங்களில் மண்ணரிப்பினை தடுத்து நிறுத்தலாம் அத்தோடு இவ்வாறான மேலும் பல நோக்கங்களை அடைவதற்காக இந்த பனை நடுகை செயற்றிட்டத்தினை தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தினராகிய உங்கள் பிள்ளைகளான எங்களால் முன்னெடுக்கப்படவுள்ளது.
இச் செயற்றிட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் பனை விதைகளை சேகரித்து தருவதோடு செயற்றிட்டத்தில் பங்கெடுத்து கொள்ளுமாறு பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது மக்களையும்,இளையோர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய எமது உறவுகள் வழங்கிவருகின்ற உதவிகளுக்கும்
பேராதரவிற்கும் எங்களது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்வதோடு தொடர்ச்சியாக தங்களின் பேராதரவை தந்து வலுச் சேர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இவ் ஊடக சந்திப்பில் தமிழ் இளையோர் மக்கள் இயக்கத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மகேந்திரன் ஜெகசீலன்,
பேச்சாளர் தியாகராஜா புவிராஜ்,
செயற்பாட்டாளர் லிங்கராஜா யஸானி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.